Loading spinner
இசையும் மொழியும் தழுவ – 1 (1)

அகம் – 1

              இரவெல்லாம் மகிழ்ந்து திளைத்து தன் நிலத்தினை தொட்டு தழுவி முத்தமிட்டு உறவாடி குளிர்ந்து முகிழ்த்த கிளர்ச்சியோடு முந்தி மழையென கொட்டி தீர்த்த சில்லிடும் துளிகள் எல்லாம் ஓய்விற்கு சென்றிருக்க, அதன் குளுமை அப்பகுதியையே ஜில்லென்று குளிர செய்திருந்தது.

தனது வீட்டு வாசலை எட்டும் பொழுதே காலை சுப்பிரபாதம் ஒலித்துக்கொண்டிருக்க வாசலில் கிடந்த தினசரி செய்தித்தாளை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தார் ஐயப்பன்.

மிகப்பெரிய உயர்தர குடியிருப்பு பகுதி அது. தனித்தனி வீடுகள் ஒருபகுதியிலும், அதற்குள்ளேயே அடுக்குமாடி குடியிருப்பு அதன் மறுபகுதியிலும் வீற்றிருந்தது.

ஐயப்பனின் இல்லம் ‘வில்லா’ எனப்படும் தனி வீடு. வீடெங்கும் சாம்பிராணி நறுமணம் நாசியை நிறைக்க உள்ளே வந்ததுமே டீப்பாயில் செய்தித்தாளை போட்டுவிட்டு தன் அறைக்குள் நுழைந்தார் ஐயப்பன்.

கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். மனைவி எழிலரசி வீட்டின் மந்திரி.

மக்கள் மூன்றுபேர். மூத்தவள் பல்லவி. திருமணமாகி அதே சென்னையில் தான் வசிக்கிறாள்.

இளையவன் நிவித்ரன் தந்தை ஐயப்பனை போல் அவனும் அதே கல்லூரியில் விரிவுரையாளனாக பணிபுரிகிறான்.

மூன்றாமவள் அந்த வீட்டின் கடைக்குட்டியான சஹானா. மென்பொருள் நிறுவனமொன்றில் கடந்த எட்டு மாதங்களாக பணியாற்றி வருகிறாள்.

ஒவ்வொருவரும் பணிக்கு கிளம்பிக்கொண்டிருக்க, எழிலரசி வேக வேகமாய் மூவருக்குமான சமையல் வேலையில் இருந்தார்.

என்றைக்கும்போல காலை வேளையின் பரபரப்பு அவரை மொத்தமாய் விழுங்கி இருந்தது.

மூவருக்கும் மதியத்திற்கு கொடுத்தனுப்ப எல்லாம் எடுத்து வைத்துவிட்டவர், ஒருபக்கம் பூரியும், கிழங்கும் தயாராகவும் எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டார்.

“சஹி ரெடியா?...” என்று இளையமகளுக்கு குரல் தர, நகத்தை கடித்தபடி,

“ம்ம்...” என்ற சப்தம் மட்டுமே மேலெழும்பியது.

அது அவளின் அருகில் அமர்ந்திருந்தால் கூட யாருக்கும் கேட்டிருக்காது. அப்படி மெதுவாய் சத்தமிட்டவள் கவனம் தொலைக்காட்சியில் தான்.

“இவளோட ஒரே இம்சை. எல்லாம் என் மாமியாரால...” என பல்லை கடித்துக்கொண்டு வந்து பார்க்க முடியாமல் எழிலரசி வேலையில் இருக்க,

“ம்மா டிபன் ரெடியா?...” என்றபடி மாடியிலிருந்து இறங்கி வந்தான் நிவித்ரன்.

எப்போதுமே எங்கும் கிளம்புவதென்றால் அத்தனை திருத்தம் அவன். ஒன்பது மணிக்கு கிளம்புவதென்றால் எட்டு மணிக்குள்ளாகவே தயாராகி வந்துவிடுபவன்.

அவ்வளவு நிதானமும் தீர்க்கமும் உள்ளவன். இதோ குளித்து கிளம்பி தயாராய் வந்துவிட,

“நிவி வந்து டிபன் போட்டுக்கோ. டேபிள்ல இருக்கு பார்...” என்று வந்து எட்டி பார்த்துவிட்டு சொல்லி செல்ல,

“என்னடா இன்னுமா நீ கிளம்பலை?...” என டிவியில் ஆழ்ந்திருந்தவளின் தலையை லேசாய் கலைத்துவிட்டு டைனிங் டேபிளுக்கு சென்றான் நிவித்ரன்.  

“ப்ச், அவ என்னைக்கு கலர் பாக்காம போயிருக்கா?...” என கணவனுக்கு காபியை கொண்டுவந்து நீட்டினார் எழிலரசி.

“நான் வந்து எடுத்துக்க மாட்டேனா எழில்?...” என்றபடி ஐயப்பன் கேட்க,

“நீங்க வந்து நான் அதையும் காமிச்சு எடுத்து தர்றதுக்குள்ள காபியும் ஆறிடும். எனக்கு நேரமும் போய்டும்...” என்று சொல்லிவிட்டு மகளையும் எட்டி பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டார் எழிலரசி.  

“இப்ப அடிச்சு என்ன செய்ய? எல்லாம் உங்க மாமியாரை சொல்லனும். அவங்க இருந்தவரைக்கும் நேரம், கலர், ஜோசியம்ன்னு இருக்கிறது பத்தாதுன்னு இவ தலையிலையும் ஏத்தி விட்டு இப்ப ராசி கலருக்கு என்ன கலரோ அதை தான் இவ முக்கியமான நாளுக்கு போடறது. விளங்கிரும்...” என்றவனின் சத்தத்தில் திரும்பி பார்த்து,

“ம்மா...” என்று சிணுங்கினாள் சஹானா.

“அவன் பேசினா அவன்கிட்ட சண்டை போடு. என்னை கூப்பிட்டா?...” என முறைத்தார் எழிலரசி.

“சரி, இன்னைக்கு க்ரீன் கலர். நான் போய் ரெடியாகிட்டு வர்றேன்...” என்று வேகமாய் மாடிக்கு செல்ல, நிவித்ரன் சிரித்துவிட்டான்.

“சிரிக்காதடா, போற வீட்டுலையும் இப்படியே இருந்தான்னா கஷ்டம்...” என்றார் பெருமூச்சுடன்.

“அதெல்லாம் பார்த்துப்பா. எதுக்கு கவலை?...” என்று கேட்டுக்கொண்டே அடுத்த பூரியை வைத்துக்கொள்ள,

“எல்லா விஷயத்துலையும் கேட்டுக்கறா. இது பாரு சின்னப்பிள்ளை மாதிரி. என்னவோ போ. எதிர்த்து பேச கூட யோசிக்கிறா. இவ என்னன்னு பிழைக்க போறா. அந்த குடும்பத்தை பத்தி விசாரிக்கும்போது கொஞ்சம் யோசனையா தான் இருக்கு...” என்றார் கவலையுடன் அவர்.

“எழில் இப்பவே ஏன் இத்தனை யோசிக்கிற? இன்னும் பைனல் பண்ணலையே? அப்பறம் என்ன? முதல்ல அவங்க ஜாதகப்பொருத்தம் பார்த்துட்டு சொல்லட்டும்....” என்றார் ஐயப்பன்.

“கிட்டத்தட்ட நல்லதா தான் சொல்லிருப்பாங்க போல? நல்ல இடமாவும் இருக்கு. குடும்பம் பெருசு மாதிரியும் இருக்கு. என்னவோ, பேசவே யோசிக்கிறவ என்னன்னு சமாளிப்பா. எனக்கு இவளை நினைச்சு தான் கவலையா இருக்கு...” என்றார் எழில்.

“சரி விடு, எதுவானாலும் சமாளிச்சு தான் ஆகனும். அந்தந்த சூழ்நிலையை கையாள தானாவே ஒரு தெம்பு வந்திரும்...” என்று பேசியபடி காபியை குடித்து முடிக்க,

“ஹ்ம்ம் என்னவோ சொல்றீங்க. இவளுக்கு முடிச்சிட்டு நிவிக்கு பார்க்கனும்...” என்று கூற,

“ம்மா...” என்றான் சலிப்புடன் நிவித்ரன்.

“ப்ச், அவ்வளோ அவசரம் என்ன?...” என்றவர், மேலும் பேசும்முன் அழைப்பு வந்தது.

“ப்பா நீங்க சாப்பிடுங்க. நான் எடுத்துட்டு வர்றேன்...” என சொல்லிவிட்டு அவரின் அறைக்குள் சென்று சார்ஜரில் இருந்த கைப்பேசியை எடுத்துக்கொண்டு வந்து தந்தவன்,

“பல்லவி தான்...” என்று கூறிவிட்டு ஹாலுக்கு சென்றான்.

“இந்நேரம் என்ன கால் பன்றா இவ?...” என ஐயப்பன் கைப்பேசியை வாங்க, அழைப்பும் நின்றது.

“பையன் ஸ்கூலுக்கு கிளம்பிருப்பானே...” என்ற எழில் ஐயப்பனுக்கு இன்னொரு பூரியை வைக்க,

“போதும் எழில்....” என்று மறுத்தார்.

“இதுக்குத்தான் சாப்பிட்டு காபி குடிங்கன்னு சொல்றது. கேட்டா தானே? எப்ப பாரு சாப்பிட முன்ன காபி...” என சலித்துக்கொள்ள மீண்டும் அழைப்பு வந்தது.

“அவக்கிட்ட பேசிட்டு நீங்க சண்டை போடுங்க...” என ஹாலில் இருந்து நிவித்ரன் கத்த, ஐயப்பன் கைப்பேசியை எடுத்தார்.

“என்னம்மா?...” என கேட்டதும்,

“ப்பா கிளம்பிட்டீங்களா?...” என்றாள் அவள் மறுமுனையில் வேகமாய்.

“இல்லையேம்மா. இன்னும் டைம் இருக்கே. பார்க்கலையா?...”

“அப்ப வீட்டுல இருங்க. கூட ஒரு பத்துநிமிஷம் கழிச்சு போகலாம். நான் அங்க தான் வந்துட்டிருக்கேன்...”

“அம்மாடி, பல்லவி...” என்று இவர் பேசும் முன் அழைப்பு நின்றது.

“பையனை ட்ராப் பண்ணாம இவ எங்க இந்தநேரம் இங்க வர்றா?...” ஐயப்பன் யோசிக்க,

“ம்மா, லஞ்ச் என்ன?...” என்றபடி சஹானாவும் வந்துவிட்டாள்.

ஆலிவ் க்ரீன் கலர் சல்வாரில் அரக்கபரக்க வந்து சேர்ந்தவள் உணவையும் எடுத்து வைக்க,

“பூரி ஆறிருக்குடா. இரு சூடா கொண்டுவர்றேன்...” என எழில் எழுந்துகொள்ள,

“ப்ச், அதெல்லாம் வேண்டாம் ம்மா. உக்காருங்க. எப்படியும் சூடா போட்டு ஆறவும் தான் சாப்பிட போறோம்...” என்று கூறி அவள் உண்ண, புன்னகையுடன் பார்த்தனர் மகளை.

அனைத்து விஷயங்களிலும் அவ்வளவு பொறுமையும், அனுசரணையும் உள்ள பெண் தான்.

தன்னால் யாருக்கும் எந்தவித தொந்தரவும் தீங்கும், தொந்தரவும் நினைத்துவிடாத குணம்.

ஆனால் அதேநேரம் சின்ன சின்னதாய் சில சிறுபிள்ளைத்தன செயல்களும் உண்டு. அதுவும் வீட்டளவில் தான்.

எப்போதோ சிறுவயதில் எங்கேயோ விழுந்து வாரி வந்த பேத்தியிடம் தன் எண்ணங்களை பேச்சுவாக்கில் கூற அது புதைந்துவிட்டது.  

“இன்னைக்கு உன் ராசிக்கு நேரம் சரியில்லை. பேசாம வீட்டோட இருந்தா இப்படி அடி பட்டிருக்குமா?...” என ஐயப்பனின் தாய் சாலாட்சி கூறி வைக்க, சின்ன பிள்ளை மனதில் அது பதிந்துபோனது.

அவருடன் அப்படி சேர்ந்து பார்க்க ஆரம்பித்தது இன்றளவும் அதனை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறாள்.

அதுவும் எல்லா நாட்களிலும் இல்லாது முக்கியமான நாளில் மட்டும் இதனை அத்தனை சிரத்தையாக மேற்கொள்வது.

அன்றைய ராசிபலனில் கூறுவதை கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருந்துகொள்வதுண்டு.

பரிட்சைக்கு செல்கையில், நேர்முகத்தேர்வுக்கு செல்கையில், முக்கியமான கலந்துரையாடல் என்று ஒவ்வொன்றுக்குமே பார்த்து கவனித்து இருப்பதுண்டு.

இதோ அன்றைக்கும் மறுநாள் கலந்துரையாடலுக்காக மாதிரிகளை தயார் செய்துவிட்டு அதனை அனுமதிக்க வேண்டுமென்னும் வேண்டுதலுடன் கிளம்பிவிட்டாள்.

“ம்மா, வந்து கற்பூரம் காமிச்சு குடுங்க...” என பூஜையறைக்கு வந்து நின்றவளுடன் தலையில் தட்டியபடி தானும் வர,

“ம்மா...” என சஹானா பாவமாய் பார்க்க,

“அவளுக்கு நல்லதா சொல்லி அனுப்புங்க. இல்லை ஈவ்னிங் நீங்க தான் சமாதானம் செய்யனும். ஞாபகம் வச்சுக்கோங்க ம்மா...” என்று பேப்பரை படித்துக்கொண்டே நிவித்ரன் பேச,

“ண்ணா உன் கூட பேசவே மாட்டேன்...” என்று கூறிய தங்கையை கண்டு அத்தனை சிரித்தான் நிவித்ரன்.

இப்படியெல்லாம் லட்சம் முறை கேட்டாகிற்றே. இப்போதும் சொல்ல தலையசைப்புடன் மீண்டும் பேப்பருக்குள் புகுந்துகொண்டான்.

சஹானா கேட்டுக்கொண்டதை போல அவர் சாமியை கும்பிட்டு விட்டு மகளுக்கு நெற்றியில் இட்டுவிட,

“ஹப்பா எப்படியாச்சும் எங்க ஹெட் ஓகே செஞ்சா போதும்....” என்று பெருமூச்சு.

“ஆனாலும் பாக்யா மகனை நீ ரொம்பத்தான் பேசற....” என சிரித்தபடி ஐயப்பனும் சட்டையை போட்டுக்கொண்டு வந்தமர்ந்தார்.

“அவன் எவ்வளோ அமைதி, சாந்தம். சிரிச்ச முகம். பார்த்தாலே அவ்வளவு பணிவும், மரியாதையும். அப்படியே அவன் அப்பாவை மாதிரி. பாக்யா தான் கலகலப்பு. அவளை மாதிரி மக. அண்ணனை மாதிரி மகன்....” என்று பேச, எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தவள் வாயே திறக்கவில்லை.

அவர்கள் கூறும் அந்த பணிவானவன் பற்றிய அனைத்துமே உண்மை என்றாலும் அதையும்விட ஒட்டாத தன்மையுடையவன் என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அகன், அகனுறைமொழியோன். பாக்யாஸ்ரீ, இனியவாணன் இருவரின் அருமை புதல்வன்.

சஹானாவின் அலுவலகத்தில் அவளுக்கு மேலதிகாரியாக ஆறுமாதங்களுக்கு முன்பு தான் பெங்களூர் கிளையிலிருந்து மாற்றலாகி வந்திருந்தான்.

நினைக்கையில் ஒரு ஆயாச பெருமூச்சு. உறவினன் என்று எங்கேயும் சொல்லிவிட கூட முடியாது.

‘யார் நீ?’ என்னும் விதமான பார்வை தான் எப்போதும். அவனை புகழ்ந்து பேச, கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு அவ்வளவு சலிப்பு.

“ம்மா நான் கிளம்பறேனே...” என்று நெற்றியை கீறியபடி சஹானா பேச,

“அக்கா வந்துட்டா...” என்றான் நிவித்ரன்.

குடியிருப்பு பகுதியின் பாதுகாப்பு தணிக்கையில் இருந்து அனுமதிக்கு அழைப்பு வந்திருக்க அதனை அழுத்திவிட்டு கூறினான் அவன்.

“சரி சரி, நீ பார்த்து கிளம்பு. நல்லபடியா பிரசன்டேஷன் பண்ணு...” என ஐயப்பன் கூற,

“ப்பா நாளைக்கு தான் பிரசன்டேஷன். இன்னைக்கு அதை எங்க பாஸ்கிட்ட அப்ரூவல் வாங்கனும்...” என்று சொல்ல,

“பாஸ் எல்லாம் ஆபீஸ்ல. இது வீடு. அவன் உனக்கு அத்தான்...” என எழிலரசி கூற, மௌனமாய் நின்றாள் சஹானா.

Loading spinner
Loading spinner
error: Content is protected !!