“ம்மா அகிலன் ஆன்ட்டிகிட்ட இந்த விஷயம் சொல்லி ஆன்ட்டி நோ சொன்ன மாதிரி தான் சொன்னாங்க. எவ்வளவோ பேசி பார்த்தேன்னு...” என்ற மதுரா,
“ஐயோ விடுங்களேன் இந்த டாப்பிக்கை. இது எனக்கு கேட்கவே வேண்டாம். என்னவோ பண்ணட்டும். எல்லாமே ஓவர். புரியுதா?...” என்று குரலை உயர்த்தி சத்தம் போட்டுவிட,
“காம் டவுன் மது...” என்று மகேஷ்வரி மகளை அமைதிப்படுத்தினார்.
அதற்கு மேல் எதுவும் பேசவேண்டாம் என அமைதியாக இருந்தவருக்கு உள்ளுக்குள் அத்தனை கேள்விகள்.
“வெளில எங்கயும் போய்ட்டு வருவோமா மது?...” என மகளிடம் கேட்க அவள் பதில் சொல்லும் முன் மதுராவின் அலைபேசி சப்தமிட்டது.
“அப்பா தான்...” என எடுத்து காண்பித்தாள் மதுரா.
“குடு நான் பேசறேன்...” என வாங்கியவர் அழைப்பை ஏற்க,
“வாட் இஸ் திஸ் மது? இன்னும் ஆபீஸ் போகலையாமே?...” என்றவர் கண்டிப்பில் பல்லை கடித்தார் மகேஷ்வரி.
“என் பொண்ணுக்கு ஹெல்த் இஷ்யூ இருந்தாலும் கண்டிப்பா ஆபீஸ் போயே ஆகனுமா?...” குரலில் அத்தனை கடினத்துடன் மகேஷ்வரி கேட்கவும் எழில்மணி நிதானமானார்.
“உங்களை தான் கேட்டேன்...” என்று மகேஷ்வரி அழுத்தம் கொடுக்க,
“மகேஷ் நானும் இல்லை. மது தானே எல்லாம் பார்த்துக்கனும்....”
“வாவ், என் பொண்ணுகிட்ட எல்லா பொறுப்பையும் நீங்க முழுசா குடுத்துட்ட மாதிரி தான் சொல்றீங்க...”
“மது சின்ன பொண்ணு. இவ்வளோ பெரிய பொறுப்பை அவளால தனியா செய்ய முடியாது மகேஷ்...” என்ற எழில்மணி,
“மதுகிட்ட மொபைல் குடு...” என்றதும் மகேஷ்வரியும் மகளிடம் நீட்டினார்.
“சொல்லுங்கப்பா...” என்ற மகளிடம்,
“நீ இப்போ பெட்டரா மது? உடம்புக்கு பரவாயில்லையா?...” என்றார்.
“எஸ் ப்பா...” என்ற மகளின் குரலில் புரிந்துகொண்டவர்,
“ஓகே, இன்னைக்கு ஒரு ப்ரென்ட் வராங்க பினான்ஸ் கம்பெனிக்கு. நீ கிளம்பு...”
“யார்ப்பா?...” என்றவள் அவர் பதில் சொல்லாததில்,
“ஓகே போய்ட்டு கால் பன்றேன்...” என்றும் சொல்ல,
“குட், நீ ரீச்சானதும் எனக்கு கால் பண்ணு...” என்று சொல்லி வைத்துவிட்டார்.
“நீ போக வேண்டாம் மது...” கேட்டுக்கொண்டிருந்த மகேஷ்வரி மறுக்க,
“ஏன் ம்மா?...” என தான் செல்வதற்கான உடையை தேடி எடுத்தாள்.
“என்ன ஏன்? அகிலன் அங்க இருப்பான்...”
“ஸோ வாட்?...” என தோளை குலுக்கியவள்,
“வெளில வெய்ட் பண்ணுங்கம்மா. லன்ச் ஆபீஸ்க்கு வேண்டாம். இங்கயே சாப்பிட்டு போறேன்...” என சொல்லவும் அவரும் வெளியேறினார் மனமே இன்றி.
வசுந்தராவிற்கு அழைத்து கேட்போமா என நினைத்தவர் பின் அதனை கைவிட்டார்.
அவர்களாகவே என்று சொல்லவேண்டுமோ அன்றே சொல்லட்டும் என நினைத்துக்கொண்டவர் உணவை தயார் செய்ய அரைமணி நேரத்தில் மகள் கீழே இறங்கி வந்தாள்.
எப்போதுமே முகம் பொலிவு தான் என்றாலும் மதியை மறைக்கும் கருமேகமாய் அவள் விழிகள் வலியை மறைக்க முயன்றது.
“பிரியாணி மட்டும் தான் ரெடியாகியிருக்கு மது...” என மகளிடம் சொல்ல,
“வைங்கம்மா, ரைத்தா இருக்கு தானே? அப்படியே வெஜிடபிள் பிக்கிள் கொஞ்சம்...” என வைத்துக்கொண்டவள் என்றைக்கையும் விட அன்று வேகமாய் உண்ண சட்டென அடைத்து புரையேறியது.
“மது மெதுவா? ஏன் இத்தனை வேகம்?...” மகேஷ்வரி மகளின் தலையை வருடி நீரை கொடுக்க,
“லேட்டாகும் தானே? அதான்...” என சமாளிப்பாய் சொல்லிவிட்டு இருந்ததை உண்டுவிட்டு கிளம்பினாள் மதுரா.
இது அவளின் இயல்பே இல்லையே. அவள் மனது உள்ளுக்குள் தடுமாறிக்கொண்டு தான் இருக்கிறது என தாய்க்கு தெரியாதா?
இந்த ரணத்தில் இப்போது அங்கே வேறு செல்லவேண்டுமா என ஆற்றாமையாக வந்தது.
பொறுமை இழந்து எழில்மணிக்கு அழைத்துவிட்டார் மகேஷ்வரி. கேட்காமல் இருக்க முடியவில்லை. கணவரிடமாவது கேட்போம் என அழைக்க,
“சொல்லு மகேஷ், மது கிளம்பியாச்சா?...” என்றார் எடுத்ததுமே.
“கொஞ்சம் முன்னாடி தான்...” என்ற மகேஷ்,
“அகில்க்கு மேரேஜாம். தெரியுமா?...” என கேட்டார் கணவரிடம்.
“ஓஹ், நான் சொல்லவே மறந்துட்டேன் பாரேன். நாராயணன் நேத்து தான் சொன்னான் என்கிட்ட. நம்மளை கூப்பிட முடியாம அவங்க வீட்டுல வச்சு அவசரமா நடந்திருச்சாம். உன்கிட்ட வீட்டுக்கு வந்து சொல்லனும்னு வசுந்தரா சொன்னதா சொன்னான்...” என்றார் சாதாரணமாக.
“ஓஹ், ஓகே...”
“உனக்கு எப்படி தெரியும்? வசுந்தரா சொல்லியாச்சா?...” என்றதும்,
“ம்ஹூம், மது சொன்னா. அகில் சொன்னதா...” கசப்பாய் கூற,
“ஓஹ், ஓகே ஓகே. கல்யாணம் இன்னும் ஒன் மந்த்ல. பொண்ணு அவங்க ரிலேட்டிவாம். போன இடத்துல பேசி முடிச்சு அங்கயே ஒப்பு தாம்பூலம் மாத்தி கையோட மோதிரமும் மாத்திட்டாங்களாம்...” என்று சொல்ல சொல்ல மகேஷ்வரிக்கு அவ்வளவு ஆதங்கம்.
“ஓகே, நாளைக்கு நான் கிளம்பிருவேன். வந்து ஒரு முக்கியமான விஷயம் பேசனும். அம்மாவை வர சொல்லனும் இங்க...” என சொல்ல என்ன என்று கூட கேட்கவில்லை மகேஷ்வரி.
“பை மகேஷ். டேக் கேர்...” என்று வைத்துவிட்டார்.
மொபைலை வைத்துவிட்டு எதுவும் பேச தோன்றாமல் மகள் அங்கே என்ன செய்கிறாளோ என்ற யோசனையில் தான் அவரின் எண்ணமெல்லாம்.
இங்கேயே தன் முன்னே உடைந்து கலங்கி நின்றாலும் அதை காட்ட விரும்பாமல் எத்தனை திடமாய் இருந்தவள் அங்கே என்ன செய்வாளோ என்றிருந்தது.
மகேஷ்வரி பயந்ததை போலவெல்லாம் மதுராவின் செயல்பாடுகள் துளியளவும் இல்லை.
அலுவலக வளாகத்தில் காரை செலுத்தியவள் பார்க்கிங்கில் இருந்து லிப்ட்டிற்கு சென்று நான்காம் தளத்தில் அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.
அனைவரின் வணக்கத்திற்கும் புன்னகையுடன் பதில் கூறியபடி உள்ளே வந்தவள் அகிலனின் அறையை தாண்டும் முன்பே அங்கே இன்னொருவரும் இருக்க கண்டாள்.
ஒன்றும் கூறாமல் கவனியாததை போலவே தன் தந்தையின் அறைக்குள் நுழைந்தவள் எழில்மணிக்கு அழைப்பு விடுக்க,
“நான் சொன்னவர் அகிலோட பேசிட்டிருக்கார் மது. போய் மீட் பண்ணு. முக்கியமான இன்வெஸ்மென்ட். அவர் குடுக்கற டீட்டெய்ல்ஸ் எல்லாம் கரெக்ட்ட நோட் பண்ணிக்கோ. ஒரு கொட்டேஷன் குடுப்பார், வாங்கிக்கோ...” என்றார் அவர்.
“என்னன்னு இன்னும் நீங்க முழுசா சொல்லலை ப்பா. சொல்லாம என்ன பேச? அகிலனையே பேச சொல்லுங்க...” என மகள் இங்கே அழுத்தமாய் கூற,
“மது, அகில்கிட்ட பேசியாச்சு. அவன் உனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணுவான். இங்க எனக்கு டைமில்லை. அப்பறம் அவர் ஒரு ப்ராப்பர்ட்டி டாக்குமெண்ட்ஸ் குடுப்பார். அதையும் வாங்கி நம்ம லாக்கர்ல வச்சிடு. இது நம்மோட பர்சனல்...” என்று இருவரியில் மதுராவிற்கு விளக்க பதில் கூறாமல் போனை துண்டித்தாள்.
அவளின் விருப்பமின்மைகளும், எதிர்ப்புகளும், கோபங்களும் இவ்வகையில் வெளிப்படும் என அறிந்திருந்த எழில்மணி இதை என்னவென்று எடுப்பது என தெரியாமல் தடுமாறினார்.
பேசி முடித்து வரட்டும் என்று காத்திருக்க மதுரா அகிலனின் அறை கதவை நாசூக்காக தட்டிவிட்டு கதவை திறந்தாள்.
“வா மது...” என்றவன் விழிகள் உயர்ந்ததில் சலனமின்றி அவனை பார்த்தவள்,
“ஹலோ...” என பொதுவாக சொல்லி சென்று அமர்ந்துகொள்ள அகிலனுக்கு அவளின் மாற்றம் அப்பட்டமாய் புரிந்தது.
உள்ளுக்குள் பெரும் அலையொன்று எழுந்து அவனை வேறுலகம் சுருட்டி செல்ல மதுராவென்னும் ஆழ்கடல் அகிலனை தன் மனதிலிருந்து கரை ஒதுக்கியிருந்தது.
மறுநாளே சென்னை வந்து சேர்ந்திருந்த எழில்மணி அடுத்த ஒரு வாரத்தில் அலங்காநல்லூர் வந்துவிட்டிருந்தார் குடும்பத்துடன்.
தாயை ஆள் அனுப்பி தன்னிடம் வரவழைக்க நினைக்க உலகநாயகியின் உடல்நிலை எழில்மணியை தன்னை நோக்கி, தன் மண்ணை நோக்கி இழுத்திருந்தது.
வந்ததில் இருந்து அத்தனை ஆர்ப்பாட்டம் செய்தார் எழில்மணி. தன்னிடம் இருந்திருந்தால் இத்தனை கஷ்டம் தேவையா என்று வாய்க்கு வந்தபடி பேசினார்.
அவரின் பேச்சுக்கள் வலுத்து அங்கிருந்த சொக்கநாதபாண்டியனின் தன்மானத்தையும் சீண்ட பொறுமை காக்கவில்லை அவன்.
“இங்க பாருங்க, உடைச்சே சொல்லிடறேன். நீங்க இப்படி எங்கம்மாவை பார்த்துக்கறதை பார்த்தா எனக்கென்னமோ இன்னும் என் பொண்ணை கட்டனும்னு உங்களுக்கு எண்ணம் இருக்கோன்னு சந்தேகமா இருக்கு. அப்படி ஒன்னு இருந்தா அதை மறந்திருங்க...” என்ற எழில்மணி பேச்சில் இளக்காரம் பொங்க நன்றாய் திரும்பி நின்றான் சொக்கநாதபாண்டியன்.
“பொண்ண கட்டனும்னு எனக்கு எண்ணமா?...” என்றவன் விழிகள் அங்கே மதுராவை காணாமல் துழாவி,
“கட்டிக்கிற மாரித்தேன் பெத்து வச்சிருக்கீரு மாமோய். ஆனா அப்படி ஒரு நெனப்பு இருந்தாங்காட்டி ஒம்மக்கிட்ட நா என்னத்துக்கு கேக்கனும்ங்கேன்? பொண்ண ஒத்த கையில தூக்கிட்டு வர தெரியாமலா?...” என்றவன் பேச்சில் எழில்மணி விக்கித்து போனார்.
“எங்க வந்து ஆருக்கிட்ட சலம்பல கூட்டுதோம்ன்னு ரோசனை வேணும். என்ன மாமோய் நா பேசுதது வெளங்குச்சா?...” என்றவன்,
“உங்க பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் முடிவே பண்ணியிருந்தா பிடிச்சு கேட்ட அன்னைக்கே அதை எப்படி நடத்திக்கனும்னு பார்த்திருப்பேன். செஞ்சு காட்டவா?...” என சொடுக்கிட்டவனின் முன்னால் ஆட்டம் கண்டது எழில்மணியின் அஸ்திவாரம்.
அதுவும் அவருக்கு புரியாதோ என்னும் விதமாய் எத்தனை இகழ்ச்சி பார்வையுடன் தெளிவாய் வேறு மீண்டும் பாண்டியன் சொல்ல அதுவே அவன் சாமானியன் அல்ல என்று அவருக்கு எடுத்துரைத்தது. மகேஷ்வரி பதறி போய் சொக்கநாதபாண்டியனை பார்க்க எழில்மணியின் வாயில் வாஸ்து சரியில்லை அன்று.