தேன் மொட்டு – 3
“இன்னுமா அந்த புதினாவை பறிச்சிட்டு இருக்க ராசு? வேகமா வாயேன்...” என சமையல் செய்யும் பெண்ணிடம் வேலை வாங்கிக்கொண்டிருந்தார் மகேஷ்வரி.
“முடிஞ்சதுங்கம்மா. அகிலன் தம்பிக்கும் குடுக்க சேர்த்து செய்யனும். கூட கொஞ்சம் போட்டா தானே வாசமா இருக்கும். ஹரியாளி சிக்கன் ஷீக் கபாப் வேற செய்யனும். அதுக்கும் வேணும்னு தான் நிறைய பறிக்கேன். நம்ம மதும்மாவுக்கு அதானே பிரியம்...” என்றாள் ராசம்மாள்.
“ஹ்ம்ம், பரபரன்னு வேலை பாருன்னா காரணத்தை மட்டும் அடுக்குவ நீ...” என சொல்லிக்கொண்டே கொத்தமல்லி இலையை கத்திரிக்கோலால் ஒன்றுபோல நறுக்கி எடுத்தார் மகேஷ்.
“ம்மா அங்க பாருங்க மதும்மா கார்...” ராசு காண்பிக்கவும் மகேஷ்வரியும் அதை தான் பார்த்தார்.
“போன வேகத்துல திரும்பி வந்துட்டா. எதையும் மறந்துட்டு போகமாட்டாளே?...” என சொல்லிக்கொண்டே,
“இந்தா இதையும் சேர்த்து கட் பண்ணிக்கோ. வேலையை சீக்கிரம் ஆரம்பி...” என சொல்லிவிட்டு மகளிடம் செல்ல,
“என்னம்மா லன்ச்க்கு இப்பவே ரெடி பண்ண ஆரம்பிச்சாச்சா?...” என சிரித்துக்கொண்டே காரை விட்டு இறங்கினாள் மதுரா.
“ஆமாடா. நீ என்ன?...” என கேட்கும் பொழுதே மகள் தலையசைத்துவிட்டு வீட்டினுள் செல்வதை கண்டவருக்கு மகளின் முகத்தின் நலிவு துணுக்குற செய்தது.
அவளின் பின்னே சென்றவர் வேகத்திற்கு முன்பே மகள் குளியலறையை தஞ்சமடைந்திருந்தாள்.
“மது...” என அவரின் அழைப்பிற்கு,
“வரேன் ம்மா...” என்றவளின் பதில் கரகரப்பாய் இருந்தது.
மகேஷ்வரியின் மனதோ இதற்கும், அதற்குமாய் யோசித்து அகிலன் விஷயத்தில் என்னவோ என நின்றது.
மகள் வரட்டும் என அவளுக்கு குடிக்க மாதுளை பழச்சாறை தருவித்து தானும் அமர்ந்திருந்தார்.
பத்துநிமிடங்களுக்கு பின் குளித்து முடித்து ஈரக்கூந்தலை டவலால் தூக்கி சுற்றியபடி வந்தமர்ந்தாள் மதுரா டிஷர்ட், ஷார்ட்ஸ் சகிதம்.
அவளை பார்த்துக்கொண்டே ஜூஸை கொடுக்காமல் இண்டர்காமில் காபியை அனுப்பும்படி சொல்லிவிட்டு அதனை தான் எடுத்து பருகினார் மகேஷ்வரி.
“ஜூஸ் எனக்கு சொல்லி நீங்க எடுத்தாச்சா?...” என சிரிப்போடு கேட்டவள் விழிகள் அத்தனை சிவந்திருந்தது.
மூக்கின் நுனி மிளகாயாய் இருக்க அதற்கு இணையாக முகமும், கண்களும் செஞ்சாந்து நிறம் பூண்டிருந்தது.
மதுராவின் மேலிமை வீக்கத்தை பார்த்ததுமே மகள் அழுதிருக்கிறாள் என தெரிந்து அமைதியாக இருந்தார்.
“ட்ரையர் போட்டுக்கறேன் ம்மா...” என்ற மதுரா முடியை உலர்த்த சிறிது நேரத்தில் காபியும் வந்துவிட்டது.
“காபி ஆறிடும், முதல்ல குடிச்சிடு மது...” என்று சொல்லியவர் தான் அந்த ஹேர் ட்ரையரை வாங்கிக்கொண்டார்.
“செம்ம ஹாட். கொஞ்சம் நேரமாகட்டுமே ம்மா...” எடுத்த கப்பை கீழே வைக்க,
“அதெல்லாம் வேண்டாம். மெல்ல குடி. அப்பத்தான் தலை வலிக்காது...” என்றதும் மௌனமாய் அவள் அருந்த,
“சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் உடைஞ்சு போய் அழுவியா நீ? உனக்கு இதை நான் சொல்லித்தரலையே மது?...” என்றார் மகேஷ்வரி.
“எமோஷன்ஸை காமிச்சா அவங்க கோழை இல்லைம்மா...” திடமாக மகளும் பதில் தர,
“குட். ஸ்டே ஸ்ட்ராங் மது...” என்றார் மகேஷ்வரி.
“அகிலனுக்கு, அவங்களுக்கு நடக்கபோற கல்யாணத்துக்கு விஷ் பண்ணிட்டு வந்துட்டேன் ம்மா...” என்று சொல்ல மகேஷ்வரியின் உள்ளம் திடுக்கிட்டது.
“வாட்? மது?...” என அதிர்ந்த பார்வையுடன் அவர் குரலும் திணற,
“நீங்க புரிஞ்சுக்கிட்டது கரெக்ட் ம்மா. அகிலனுக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க...” என்றாள் இன்னும் தெளிவாக.
“வசுந்தரா இதை பத்தி எதுவுமே சொல்லலையே நம்மக்கிட்ட?...” என்றவர் மகளின் முன் வந்து அமர்ந்தார்.
“நீ அகில்கிட்ட வேற எதுவும் கேட்கலையா மது?...” மகளை அறிந்துகொள்ள நினைத்து வினவ,
“என்ன கேட்கனும்? எனக்கு எந்தவித விளக்கமும் தேவைப்படலை ம்மா. அதான் கேட்கலை...”
“மது இது ஒன்னும் பிஸ்னஸ் இல்லை. குடும்ப சண்டையும் இல்லை. வாழ்க்கை. இதுதான் உன்னோட எதிர்காலம்ன்னு நீ முடிவு பண்ணி தேர்ந்தெடுத்த பாதை. கேட்கலைன்னு ஈஸியா சொல்ற? நீ கேட்டிருக்கனும்...” என்றார்.
“ஈஸியா சொன்னேனா?...” என கேட்டவள் விழிகள் அப்பட்டமான வேதனையை பிரதிபலித்தது.
“கண்டிப்பா ஈஸி இல்லைம்மா. ஆனா கேட்க தோணலை. கேட்க கூடாதுன்னு ஒரு பிடிவாதம்...” என்றவள்,
“நிச்சயம் முடிஞ்சு மூணு நாளாச்சாம். அகிலன் சொல்றாங்க. இந்த மூணு நாள்ல ஒருதடவை கூட என்கிட்ட சொல்லலையே. சொல்ல தோணலைன்னா என்ன அர்த்தம்?...” என்ற மகளுக்கு மகேஷ்வரியால் பதில் சொல்ல முடியவில்லை.
“அதுமட்டுமில்லை, அகிலன் ஏற்கனவே டிஸைட் பண்ணிட்டு வந்து தான் பேசறாங்க. நான் வேண்டாம்ன்னு முடிவுக்கு வந்துட்டாங்க. இப்படி நடக்குது, நடக்க போகுது, சூழ்நிலையால நடந்திருச்சு, என்ன செய்யலாம்ன்னு எதுவும் என்கிட்ட கேட்கலையே. ஷேர் பண்ணலை...” என்றவள்,
“என்ன பேசனும் அவங்ககிட்ட? சேர்ந்து நின்னு பேஸ் பண்ணனும்னு சொல்லலை. வீட்டுல சம்மதிக்கிற வரைக்கும் வெய்ட் பண்ணுவோம்னும் சொல்லலை. எல்லாமே முடிஞ்சிருச்சுன்னு சொல்றவங்கட்ட கெஞ்ச சொல்றீங்களா?...”
மதுராவின் குரலில் ஆதங்கத்தை விட ஆவேசம் மிகுந்திருந்தது. தன்மானமும் அதற்கிணையாய் போட்டி போட,
“மது நான் வசுந்தராகிட்ட பேசறேன்...” என்ற மகேஷ்வரியை உறுத்து விழித்தாள் மகள்.
“அகிலன்கிட்டையும் அவங்க பேமிலிக்கிட்டையும் கெஞ்சற இடத்துல உங்க பொண்ணை நீங்க வைக்கலை ம்மா. புரிஞ்சு பேசுங்க. இங்க அகிலன் பிரச்சனை இப்படின்னு வந்து என்கிட்ட என்ன சொல்யூஷன் தேடலாம்ன்னு கேட்க வரலை...”
“இருக்கலாம் மது. அகிலன் சுட்சுவேஷன் அப்படி இருந்திருக்கும். ஆனா அதுக்காக நாமளும் வீம்பு பண்ண கூடாது பாரு. அகிலுமே இதை விருப்பப்பட்டு செஞ்சிருக்க முடியாது மது...”
“வாட்டெவர், அவங்க வாழ்க்கையில வேற பொண்ணு வந்து மூணு நாள் ஆச்சு. அதை என்கிட்ட மறைச்சு மூணு நாள்ல என்னை தள்ளி நிறுத்தியாச்சு. ஒரு ஸ்ட்ராங்கான டிசிஷன் எடுக்காம அகிலன் என்கிட்ட பேசியிருக்க முடியாது ம்மா...” என்றவள்,
“இதுக்கு மேல நீங்க இதை பத்தி யார்கிட்டயும் பேச வேண்டாம். பேசியும் பிரயோஜனமில்லை. அது என்னை இன்னும் கீழே இறங்க வைக்கும்...” என முடிவாய் சொல்லிவிட்டாள்.
“உன்னால இதை ஈஸியா க்ராஸ் பண்ணிட முடியுமா மது?...” மகளை கவலையுடன் மகேஷ்வரி பார்க்க,
“வொய் நாட்? உருகி உருகி லவ் பன்றேன்னு நான் போய் சொல்லலை. அகிலனுக்கு என்னை பிடிச்சது. என்கிட்ட ப்ரப்போஸ் பண்ணினாங்க. நானும் மறுக்க காரணமில்லைன்றதால அக்ஸப்ட் பண்ணினேன்...”
“மதும்மா...”
“எஸ், எனக்கும் பிடிச்சது. அவங்க என்கிட்ட பழகின விதம், நான் ஓகே சொல்ற வரைக்கும் எனக்கு நேரம் கொடுத்தது, அவங்க கேரெக்டர், அப்ரோச் இப்படி எல்லாமே பிடிச்சது...” அடக்கிப்போன குரலில் சொல்லியவிதம் மகேஷ்வரியை பெரிதும் பாதித்தது.
“வேண்டாம் மது. விட்டுடு...” என்றார் மகளை தேற்றி.
“நான் ஓகே ம்மா. எனக்கென்ன? பர்பெக்ட்லி ஆல்ரைட்...” என்று கண்ணை நிறைக்கவிருந்த நீரை உள்ளிழுத்து புன்னகைத்தவள்,
“நீங்க எதையும் நினைச்சு பீல் பண்ண வேண்டாம். இப்படி முகத்தை வச்சுட்டிருந்தா நான் தப்பு பண்ணிட்டதா எனக்கே பீலாகிடும் ம்மா...” என்று சொல்ல மதுராவின் கன்னத்தை தட்டினார் மகேஷ்.
உள்ளுக்குள் அத்தனை நொறுங்கிபோயிருந்தார் மகேஷ்வரி. மகளுக்கு தான் தான் சொல்லி வளர்த்திருந்தார் ‘உன் பலவீனங்களை வெளியில் காண்பிக்காதே. எதிர்த்து நின்று துரத்து’ என.
இப்போது தன்னிடமே மகள் வருத்தத்தை, வேதனையை மறைத்து புத்துணர்ச்சியாய் காண்பித்துக்கொண்டு மனதின் பாரத்தை பகிராதிருக்க கண்டு மகேஷ்வரிக்கு பலமிழந்தது இதயம்.
“ம்மா லீவ் இட். சியரப் ம்மா....” மதுரா கூறவும் தாய் மெல்லிய புன்னகை புரிய,
“ஹ்ம்ம், குட்...” என தாயின் கன்னத்தில் முத்தமிட மகேஷ்வரி முகம் யோசனையில் ஆழ்ந்தது.
“என்னம்மா? இன்னும் என்ன யோசனை?...” என்று வாரிய கூந்தலை கர்லரில் சுழற்ற ஆரம்பித்தாள் மதுரா.
வலிதான். காலத்திற்கும் மறையாத வலி. இவன் தான் எதிர்காலம் என கனவுகளில் வளந்திருந்தவள் முகத்தில் நிஜம் இதுவென அறைந்து காண்பிக்க கோபமெனும் தீயில் வலியை எரிக்க முயன்றுகொண்டு இருந்தாள் மதுரா.
தன் முகவாட்டம் மகேஷ்வரியை நிச்சயம் தாக்கும் என அதையும் அவள் வெகுவாய் மறைத்துக்கொண்டாள்.
இப்போது அவரின் முகத்தின் யோசனையில் மதுராவுமே வருத்தம் தோய அவரை அழைக்க,
“நத்திங் மது. என் யோசனையெல்லாம் ஏன் வசுந்தரா நம்மக்கிட்ட கூட சொல்லாம இதை செய்யனும்? அதுவும் மூணு நாள் முன்னவேன்னா? நேத்தும் கூட பேசினேன் போன்ல. அவளும் எதுவும் காமிச்சுக்கவே இல்லை...” என குழப்பமாய் சொல்ல,
“நம்மக்கிட்ட சொல்லி தான் ஆகனுமா என்ன? சொல்ற அளவுக்கு நம்மள அவங்க நினைக்கலை. தட்ஸ் இட். விடுங்கம்மா...” மதுரா பெரிதாய் நினைக்க வேண்டாம் என்று அதனை தவிர்க்க,
“உங்கப்பாவுக்கும் தெரியாது போல? தெரிஞ்சா வருத்தப்படுவார்...”
“ம்மா, அதை நினைக்காதீங்கன்னு சொன்னேன்...”
“நினைக்கறதுக்கில்ல மது, நம்மளை தவிர்க்க காரணம்? எனக்கு புரியலை. இத்தனை வருஷம் பிஸ்னஸ் பண்ணிருக்கோம். இப்பவும் அதுல பிரச்சனை எதுவும் இல்லை. ரெண்டு குடும்பமும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் எதுவும் செஞ்சதில்லை....” என்றவர்,
“ஈவன் உன் பாட்டி மூலமா அந்த மதுரை வரன் வந்தப்போ கூட அதையும் நான் சொல்லியிருந்தேன் வசுந்தராகிட்ட. உன் பொண்ணால அங்க போய் லைஃப் லாங் வாழ முடியாது. இங்க சிட்டி சைடே உன் சொந்தத்துல பார்த்து முடின்னு சொன்னா...” என்று கூறும் பொழுதே தலையை பிடித்துக்கொண்டார்.