எப்போதுமே அமைதி தானே. அந்த அமைதிதான் அவனை முதலில் அவளிடம் ஈர்த்தது. வார்த்தைகளுக்கு வலித்துவிடுமோ எனும் குரல்.
அகனின் நினைவுகள் பின்னோக்கி நகரும் போலிருக்க, அதனை இழுத்து அதட்டி வைத்தான்.
தான் மட்டும் விரும்பி என்ன பயன்? தன்னை உறவென்றே அவள் அறிந்துகொள்ள எத்தனை வருடங்கள்?
அதன்பின் விருப்பம் என்று வீட்டில் சொல்லி பேசும்முன் அவள் இன்னொருவனுக்கு நிச்சயமாகி இருக்க, இதனைக்கொண்டு அதற்குமேல் நினைவால் தொடர்வது கூட அநாகரீகம் என்று தன் மனதிற்கு கடிவாளமிட்டுக்கொண்டான்.
தனக்குள் வட்டமிட்டுக்கொண்டவன் மீண்டும் திருமணம் என்று நினைக்கவே இல்லை.
நிவேதிதாவின் திருமணம் முடிந்து இதோ ஆறு வருடங்களாகிற்று. இந்த ஆறு வருடத்தில் முதல் ஒருவருடம் தவிர்த்து ஐந்துவருடமாய் பாக்யாவும், இனியவாணனும் மகனிடம் போராடாத குறை தான்.
‘வேண்டாம்’ என்ற வார்த்தை மட்டுமே அவனிடம். அழுத்தம் நிறைந்தவன்.
அவனை அசைக்கவும் முடியவில்லை. நாளடைவில் மகனின் பிடிவாதத்தில் பயம் தான் கூடி இருந்தது.
இதோ இன்றைக்கு இப்படி பார்த்ததும் பாக்யாவின் மனதில் பெரும்வலி, இதுவும் மகனை வருத்துமோ என்று.
ஆனால் அவன் அதையெல்லாம் கடந்து வெகுதூரம் பயணமாகிவிட்டதை அவர்கள் தான் உணரவில்லை.
திருமணம் என்னும் ஒன்றை மறந்தும் கூட யோசிக்கவும் அவன் தயாராய் இல்லை.
அப்படி செய்துகொள்வதாய் இருந்தால் முதலில் தான் முழுமனதுடன் அதற்கு தயாராக இருக்க வேண்டுமென்று மனதினை அதன் திசைக்கு செலுத்தவில்லை.
பாக்யாவின் எண்ணவோட்டம் எதையும் கண்டுகொள்ளாதவனை போல் சம்பந்தத்திடம் பேசிக்கொண்டிருந்தான் அகனுறைமொழியோன்.
“நிவிம்மா, உன் ப்ரெண்ட் யாருக்கோ ஐடில ஜாப் ரிலேட்டடா ஹெல்ப் வேணும்னு சொல்லிட்டிருந்தியே. அகன் வொர்க் பன்ற கம்பெனில வேணும்னா ட்ரை பண்ணி பார்க்க சொல்லலாமே?...” என்றதும் நிவேதிதா அகனை பார்த்தாள்.
“உங்களுக்கு சரின்னா உங்க நம்பரை என் ப்ரெண்ட்க்கு ஷேர் பண்ணலாமா?...” என்று அவள் பேச,
“நிவி அத்தான்னு சொல்லனும். என்ன நீ?...” என்று மீண்டும் சம்பந்தம் மகளிடம் வலியுறுத்த,
“இருக்கட்டும் மாமா, வேண்டாம்...” என்ற அகன்,
“என் நம்பர் ஷேர் பண்ணுங்க. அப்படியே உங்க ப்ரெண்ட் டீட்டெய்ல்ஸ் என் ஆபீஸ் ஐடிக்கு மெயில் பண்ண சொல்லுங்க. பர்தரா நான் கைட் பன்றேன். பட் நோ ரெக்கமண்டேஷன்...” என்றான் சிரித்த முகமாய்.
“இல்ல இல்ல, ரெக்கமென்ட் வேண்டாம். நான் சொல்றேன்..” என்ற நிவேதிதாவிடம் தலையசைத்தவன்,
“ஓகே மாமா. நீங்க பேசிட்டு என்கிட்ட சொல்லுங்க. நான் உங்களுக்கு இன்பார்ம் பன்றேன்...” என்று கூறிவிட்டு,
“ஆல்ரெடி லேட்...” என்றான் தாயை பார்த்துவிட்டு.
“சரிங்க மருமகனே, நீங்க புறப்படுங்க. நாங்களும் கிளம்பனும்...” என்று சம்பந்தம் விடைபெற, அவருக்கு தலையசைப்பை கொடுத்தவன் அனைவரையும் புன்னகையுடன் பார்த்துவிட்டு சாப்பிட்டு வந்துகொண்டிருந்த திலோத்தமாவிடம் சென்றான்.
“அண்ணா ப்ரேக்பாஸ்ட் சூப்பர். போய் சாப்பிடுங்களேன்...” என்றாள் அவனிடம்.
“பசியில்லை திலோ. நீ கிளம்பறியா, இல்லை லேட்டாகுமா?...” என்றான் அவளிடம்.
பாக்யஸ்ரீயும் மகனோடு வந்துவிட தன் தாயின் முகம் பார்த்தவளுக்கு என்னவோ சரியில்லை என்று புரிந்தது.
“இல்லண்ணா...” என்றவள்,
“என்னன்னு சொல்லுங்கண்ணா...” என்று கேட்க,
“அகன் நீ லேட்டாகுதுன்னா கிளம்பு. நான் கார் புக் பண்ணி கிளம்பிப்பேன்...” என்றார்.
வெளியே மழை இன்னும் தூறலை சிந்திக்கொண்டு தான் இருந்தது. அதிகமாகிவிட்டால் அதற்கு கஷ்டம் என்று தெரியும்.
“பசிக்குதா ம்மா?...” என்று கேட்க,
“நான் ஒரு டாக்டர். மார்னிங் ஃபூட் எவ்வளோ இம்பார்ட்டென்ட் தெரியுமா?...” என பாக்யஸ்ரீ கூறவுமே பக்கென்று சிரித்துவிட்டான் அகனுறைமொழியோன்.
திலோத்தமா என்னவென்று பார்வையால் தாயிடம் கேட்க, பிறகு கூறுவதாய் தலையை மட்டும் அசைத்தார் அவர்.
“சரி போய் சாப்பிட்டு வாங்க. நான் வெய்ட் பன்றேன்...” என்றவன், கைப்பேசியுடன் மண்டபத்தின் முன் சென்று நின்றான்.
“ம்மா...”
“நிவி வந்திருக்கா திலோ...” பாக்யஸ்ரீ கூற,
“காட், நான் கவனிக்கலையே. அண்ணா பார்த்தாங்களா?...”
“பார்த்து பேசி, முடிச்சிட்டு தான் வர்றோம்...” என்று பேசிக்கொண்டே சாப்பிடும் இடம் செல்ல,
“நீ இன்னுமா சாப்பிடலை பாக்யா?...” என்ற குரலிலும் கை பிடித்து அழைத்த அழைப்பிலும் யார் என்று பார்க்க அங்கே நின்றது எழிலரசி.
“நீயும் இப்ப தான் சாப்பிட வர்றியா எழில்?...” என்றார் பாக்யா அவரிடம்.
“ஹ்ம்ம், நாங்க கல்யாணத்துக்கு வந்ததே லேட். அதுவும் நிவித்ரன் வரலைன்னு சொல்லிட்டான். அவரும், பொண்ணும் மட்டும் கூட வந்தாங்க. அவர் காலேஜ்க்கு கிளம்பனும். அவ ஆபீஸ் கிளம்பனும். பந்தில ரெண்டு இடம் தான் இருந்தது. அவங்க உக்கார்ந்தாச்சு. நான் இனிமே தான்...” என்றார் எழிலரசி.
“ஆமா, சஹானா வந்திருக்காளா?...” என்ற பாக்யாவின் கண்கள் அங்கே தூரத்தில் அமர்ந்து உண்டுகொண்டிருந்த பெண்ணிடம் சென்றது.
“அவ வராம, பையன் நமக்கு சொந்தம். பொண்ணு சஹானாவுக்கு ப்ரெண்ட். காலேஜ்ல கிளாஸ்மேட். வராம எப்படி? அதான் வந்துட்டு இங்க இருந்தே கிளம்பறா...” என்றார் எழிலரசி.
“என்ன அத்தை, அம்மா மட்டும் தான் கண்ணுல தெரியும். என்னை பார்க்கலை பார்த்தீங்களா?...” என்று இருவருக்கும் இடையில் திலோத்தமா வர,
“அடடா, புதுப்பொண்ணு. நிஜமாவே கவனிக்கலைடா...” என்றார் எழிலரசி.
“அதுசரி, பேச ஆள் கிடைச்சா என்னை மறந்துடுவீங்களே? சரி நீங்க பேசிட்டிருங்க. நான் போய் அண்ணாவோட இருக்கேன்...” என்றுவிட்டு திலோ நகர்ந்துவிட்டாள்.
“ஆமா, சஹானாவுக்கு வந்த வரன் எப்போ பார்க்க வர்றதா சொல்லிருக்காங்க? தேதி பைனல் பண்ணியாச்சா?...” என பாக்யா கேட்க,
“சம்பிரதாயமா பார்க்க வர்றாங்க. அதுக்கு தேதி குறிச்சாச்சு பாக்யா...” என்றார் எழிலரசி.
அதற்குள் அடுத்த பந்தி துவங்க. அங்கே சென்று அமர்ந்தனர் இருவரும். இருவரும் அமரவும், ஐயப்பனும், சஹானாவும் உண்டுமுடித்து எழுந்து வந்தனர்.
“இப்பதான் வந்தியாம்மா?...” என்று ஐயப்பன் பாக்யஸ்ரீயிடம் கேட்க,
“இல்லண்ணே, நான் சீக்கிரம் வந்துட்டேன். இப்போ கிளம்பனும்...” என்றவர், சஹானாவை பார்த்தார்.
“இன்னைக்கு டீம் மீட் இருக்குன்னு அகன் சொன்னான். அவனும் இன்னும் கிளம்பலை சஹானா...” என்றார் அவளிடம்.
“அதுக்குள்ள ஆபீஸ்க்கு ரீச்சாகிடுவேன் த்தை...” என்ற சஹானா தன் தாயிடம் சொல்லிவிட்டு புறப்பட்டாள்.
அப்போதும் கூட அகனுடன் சேர்ந்து செல் என்று எல்லாம் கூறவில்லை பாக்யஸ்ரீ. கூறவும் முடியாதென்பதால் அடக்கி வாசித்தார்.
எழிலரசி குடும்பமும் குடியிருப்பு பகுதியில் தான் பாக்யஸ்ரீ குடும்பமும் வசிக்கின்றனர்.
தூரத்து உறவுகளும் கூட. எழிலும், பாக்யஸ்ரீயும் தோழிகளும் ஆவர். அதுவே இத்தனை வருடங்களாக அவர்களை பிடித்து வைத்திருந்தது.
பேசிக்கொண்டே உண்டுமுடித்துவிட்டு பாக்யஸ்ரீ வெளியே வர திலோவிடம் பேசிக்கொண்டிருந்தான் அகனுறைமொழியோன்.
“போலாம் அகன்...” என்று மகனிடம் கூற,
“ஓகே, நான் கார் எடுத்துட்டு முன்னாடி வர்றேன். நீங்க நனையாம நில்லுங்க...” என்று கூறியவன் ரக்ஷன், திலோவிடமும் கூறிவிட்டு செல்ல,
“நானே போய்க்கறேன்னு சொன்னாலும் கேட்கமாட்டேன்றானே...” என மகளிடம் அலுத்துக்கொண்டார்.
“நீங்க கிளம்புங்கம்மா. அப்பறம் முன்னாடி நின்னு ஹார்ன் அடிப்பாங்க. அதுக்கு முன்ன போயிருங்க. அதுவும் நனையாம...” என்று திலோ கேலி பேச,
“கழுத...” என்று மகளின் கையை தட்டிவிட்டு,
“வர்றேன் மாப்பிள்ளை...” என்று ரக்ஷனிடம் கூறிவிட்டு வெளியே வர முன்பகுதியில் அவ்வளவாய் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
சஹானா மட்டும் கைப்பேசியை பார்ப்பதும், வாசலை பார்ப்பதுமாய் இருந்தாள்.
“என்னடா இன்னும் கிளம்பலை நீ?...” என அவளை பார்த்ததும் அங்கே வந்து நிற்க,
“கேப் புக் பண்ணிருக்கேன் த்தை. பக்கத்துல வந்திருச்சு. ட்ராபிக்னால லேட்டாகுது...” என்றாள் சஹானா.
“ஸ்கூட்டி எடுத்துட்டு வரலையாடா நீ?...” என கேட்க,
“சர்வீஸ்க்கு விட்டிருக்கேன் த்தை. அதான் அப்பாம்மாவோட வந்துட்டேன்...” என்றாள்.
“அப்படியா?...” என்றவருக்கு தன்னுடன் அவளை அழைத்து செல்ல தான் ஆசை.
ஆனால் தன் மகன்? சட்டென தலையை உலுக்கிக்கொண்டார். எதற்கு வம்பு என்று அவளிடம் புன்னகைத்தவர் ஹார்ன் சத்தத்தில் திரும்ப மகனின் கார் வந்துநின்றது இருவருக்கும் அருகில்.
“வந்துட்டேன்...” என்ற பாக்யஸ்ரீ காரை சுற்றிக்கொண்டு மகனின் மறுபக்கத்திற்கு வர அகன் திரும்பி சஹானாவை பார்த்தான்.
“கேப் புக் பண்ணிருக்கேன் ஸார்...” அவன் கேளாமலே பார்வையின் கேள்வியை வைத்து பதில் கூற,
“லேவேன்க்கு மீட்டிங் சஹானா....” என்று அகன் தன் கை கடிகாரத்தை பார்க்க,
“வந்திருவேன் ஸார்...” என்றாள் அவனிடம்.
“ஹ்ம்ம்...” என்று தலையை மட்டும் அசைத்துக்கொண்டவன் பாக்யஸ்ரீ ஏறியதும் கிளம்பிவிட்டான்.
‘ஒரே ஆபீஸ், இவன் டீம்ல தான் வேலை. அந்த பொண்ணை கூட கார்ல ஏத்திக்கிட்டா என்னவாம்?’ என்று பாக்யஸ்ரீக்கு ஆதங்கமாக இருந்தது.
அவரின் எண்ணவோட்டம் புரிந்தாலும் அதனை எல்லாம் கண்டுகொள்ளவில்லை அகனுறைமொழியோன்.
அடுத்த மூன்றாவது நிறுத்தத்தில் தாயின் மருத்துவமனை வரவும் அதில் அவரை இறக்கிவிட்டவன், மீண்டும் தன் பயணத்தை துவங்க, கைகள் தன்னைப்போல் காரில் அவனின் விருப்பப்பாடலை ஒலிக்கவிட்டது.
‘தேய்ந்து வளரும் தேன்நிலாவே மண்ணில் வா’ என்னும் வரிகளுடன் அவனின் விரல்களும் கார் ஸ்ட்ரியரிங்கில் தாளமிட லாவகமாக வாகனத்தை செலுத்தியவன் முகம் சஞ்சலமின்றி நிர்மலமாக இருந்தது.