அகம் – 2
லேசான மழை தூறல் தரையை இதமாய் நனைக்க முயன்றுகொண்டிருந்தது.
பெரிதும் இல்லாது வலிந்தும் இல்லாது மிதமான குளுமையை பரவலாய் தந்தபடி அந்த சூழ்நிலையை இதமாக்கிக்கொண்டிருந்தது.
திருமணமண்டபத்தில் அப்போதுதான் தாலி கட்டும் வைபவம் முடிந்திருக்க ஏனைய சொந்தங்கள் உணவினை முடித்துக்கொண்டு தங்களின் பணிகளுக்கு செல்வதில் முனைப்பாகினார்கள்.
“நல்லவேளை எர்லி மார்னிங் முகூர்த்தமும் இல்லாம, பத்துமணிக்கு மேலையும் இல்லாம எல்லாருக்கும் வசதியா வச்சிருக்காங்க...” என்று தங்களின் சொந்த காரணங்களுக்காக அவற்றை சில்லாகித்துக்கொண்டனர்.
முன்பு சொந்தங்களுடன் உறவாட என்றிருந்த விசேஷங்களுக்கு தங்களின் வசதியை பார்ப்பது போய், தங்களின் வசதிக்காக வந்துபோக முடிந்தால் மட்டுமே விசேஷங்களில் பங்கேற்கும் முறை நடைமுறையாகிக்கொண்டிருந்தது.
மணமக்களை வாழ்த்த சென்ற கூட்டம் ஒருபக்கம் வரிசையில் நின்றிருக்க, பரிசுப்பொருளை கையில் வைத்துக்கொண்டும், தங்களின் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்துக்கொண்டு அலுத்துக்கொண்டனர்.
“எதுக்கெல்லாம் க்யூ?...” என்ற பேச்சுக்கள் முணுமுணுப்பென்றாலும் அனைவராலும் பேசப்பட்டது.
இதை எல்லாம் ஓரிடத்தில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தவன் விழிகள் கனிவும், கண்ணியமுமாய் ஓரிடத்தில் நிலைத்துவிட்டு பின் விலகி திரும்ப, அதனையும் தூரத்தில் சஹானா கவனிப்பதை அவன் கவனிக்கவில்லை.
“அகன், உனக்கு டைம் இருந்ததுன்னா சாப்பிட்டு போகலாமே?...” என்றார் பாக்யஸ்ரீ.
“நோ ம்மா, வந்தாச்சு, கல்யாணத்துல கலந்தாச்சு. கிளம்புவோம்....” என்று தலையசைக்க, மகனை புன்னகையுடன் பார்த்தாலும் நெஞ்சோரம் ஊடுருவும் வலியினை அவரால் தவிர்க்க முடியவில்லை.
“நீங்க சாப்பிட்டா உங்களை கிளினிக்ல ட்ராப் பண்ணிட்டு நானும் ஆபீஸ் போவேன். திலோ ரக்ஷனோட கிளினிக் வந்திடறதா சொன்னா. சாப்பிட போயிருக்கா...” என்றான் அகனுறைமொழியோன்.
பாக்யஸ்ரீ, இனியவாணன் தம்பதிகளின் மூத்தமகன். மென்பொருள் பொறியாளனான அகனுறைமொழியோன். இளையவள் திலோத்தமா.
தாயை போல் மருத்துவர். தற்போது மகப்பேறு மருத்துவம் படித்துக்கொண்டிருந்தாள். நான்குமாதத்திற்கு முன்பு தான் திருமணம் முடிந்திருந்தது.
உறவினரின் திருமணத்திற்காக அவளும் தன் கணவனுடன் வந்திருந்தாள்.
அத்தனை சொந்தங்களையும் அங்கே ஒன்றாக காண முடிந்தது. வந்தவர்கள் அனைவருக்கும் அகனை தெரிந்திருந்தது.
நலம் விசாரிப்புகள் கடந்து அகனுடன் பேச்சுக்களோடு பாக்யஸ்ரீயிடமும் அவன் திருமணத்தினை பற்றி விசாரித்தனர்.
வயது சென்றுகொண்டிருக்கிறது இன்னுமா பெண் பார்க்கவில்லை, இல்லை அமையவில்லையா என்றும் கேட்டுவிட்டனர்.
அமையவில்லை என்றால் எவரும் நம்பமுடியாது என்னும் விதத்தில் தான் அழகு, கம்பீரம், படிப்பு, பதவி என அவனிருந்தான்.
நான் நீ என்று போட்டிபோட்டுக்கொண்டு பெண் தர தயாராக இருக்கும் உறவுகளே ஏராளம்.
கேட்பவர்களிடம் அத்தனை சுலபமாய் பதில் கூற முடியவில்லை. சமாளிக்கும் முன் பாக்யா தான் திணறி போவார்.
இதோ இப்போதுமே எத்தனை ஆசையுடன் வந்தாரோ, அதே வேகத்தில் கிளம்பிவிட்டால் போதும் என்றானது.
அதிலும் கண்ணுக்கு லட்சணமாய் கம்பீரமாய் தன் மகன் நிற்க, அவனையும் அதே மணக்கோலத்தில் பார்த்துவிடமாட்டோமா என்னும் ஏக்கம் தான் அவரை பெரும்பாலும் அரித்துக்கொண்டிருந்தது.
“ம்மா உங்களை தான். சாப்பிட்டு வாங்க. கிளம்ப வேண்டாமா?...” என்றான் தாயின் தோள் தொட்டு.
“ஹாங், இதோ போறேன் அகன்...” என்றவருக்கு பசியே இல்லை.
அதையும்விட மனதே இல்லை எனலாம். அழுத்தம் கூடுவதை போலிருக்க மகனை பார்த்துக்கொண்டு அவர் நின்றார்.
மகன் நினைத்ததை போல் நடந்திருந்தால் நிச்சயம் அவனுக்கு திருமணமாகி ஆறுவருடங்கள் கடந்திருக்கும்.
பெருமூச்சுடன் தலையசைத்துக்கொண்டவர் மனதில் சுருக்கென்று வலி. தானும் கொஞ்சம் கவனித்திருக்க வேண்டுமோ என்று.
“ஓகே ம்மா, ஒரு கால் பேசிட்டு வர்றேன். நீங்க சாப்பிட்டு வாங்க. வெய்ட் பன்றேன்...” என்று சொல்லி அவன் நகரவும் செல்லும் மகனையே விழியெடுக்காது பார்த்து நின்றார் அவர்.
“எப்படிம்மா இருக்க பாக்யா?...” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்ப, முகமெல்லாம் புன்னகையுடன் ஞானசம்பந்தம் நின்றிருந்தார்.
“அண்ணே...” பாக்யா தன்னை போல் அழைத்தார்.
“நல்லாருக்கியாம்மா? போனதடவை உடுமலைபேட்டைல மனோகர் மகன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை மட்டும் தான் வந்திருந்தாரு. உன்னை பார்க்க முடியலையே. நல்லவேளை இங்க பார்த்துட்டேன்...” என்றதும் அவருக்கு தலையசைத்தவர்,
“நான் நல்லாருக்கேன் ண்ணே. திலோவுக்கு அப்போ தானே தாலி பிரிச்சு கோர்க்கிற விசேஷம் வச்சிருந்தோம். நிறைய வேலை. அதான் வரமுடியலை. அண்ணி வந்திருக்காங்களா?...” என்று ஞானசம்பந்தத்தின் பின்னால் தேடினார்.
ஞானசம்பந்தம் பாக்யஸ்ரீயின் நெருங்கிய உறவினர். அண்ணன் முறை. பாக்யஸ்ரீ தாத்தாவும், சம்பந்தத்தின் தாத்தாவும் உடன்பிறந்த வகையில் இவர்கள் சகோதர உறவு.
பெரும்பாலும் இதுபோன்ற குடும்பத்தின் பொதுவான நிகழ்வுகளில் தான் அவரையும், அவரின் குடும்பத்தினரையும் சந்திக்க முடியும்.
பார்த்தால் அனைவரையும் பார்த்து, தானாய் சென்று பேசி தன்னை ஞாபகப்படுத்தியாவது பழகிக்கொள்வார்.
ஆனாலும் அப்படி ஒருவரின் மீது பாக்யஸ்ரீக்கு தீராத ஆதங்கமும், வருத்தமும் தலைதூக்கி நின்றது.
காண்பித்துவிடத்தான் முடியவில்லை. காண்பித்தாலும் தவறு தன் மீது தானே என பொறுமையும், நிதானமுமாக அவர் நின்றார்.
“என்னம்மா பாக்யா, நான் பேசிட்டே இருக்கேன். நீ ஒரு யோசனைல இருக்க போல?...” என்றதும் அவர் விழிக்க,
“சரியா போச்சு, எங்க அத்தானையும், மருமகனையும் காணுமே? திலோவை டைனிங் ஹால்ல பார்த்தேன்...” என்று பேச,
“அவர் வரலை ண்ணே, நானும் அகனும் தான் வந்தோம்...” என்றவர், பார்வை அங்கே தங்களை நோக்கி சிரிப்போடு வந்துகொண்டிருந்தவர்களை கண்டு கனத்துடன் புன்னகைத்தது.
“நல்லாருக்கியா பாக்யா? உன்னை பார்த்து எவ்வளோ நாளாச்சு? திலோ கல்யாணத்துல பார்த்தது...” என்றார் ஞானசம்பந்தத்தின் மனைவி பைரவி.
“நல்லாருக்கேன் அண்ணி. இப்ப தான் அண்ணாட்ட கேட்டுட்டிருந்தேன். நீங்க எப்படி இருக்கீங்க?...” என்றவர் பார்வை அவரின் அருகில் நின்ற பெண்ணிடம் சென்றது.
புன்னகையுடன் அவரை கண்டு இன்முகப்பார்வையை அவள் செலுத்த அவள் கையில் பிடித்துக்கொண்டு நின்ற குழந்தை,
“ஹாய் பாட்டி...” என அழகாய் கை நீட்டியது.
“ஹாய் குட்டி...” என்றவர், அதன் கன்னம் வருடி கொஞ்சி,
“எப்படி இருக்கம்மா?...” என்றார் அந்த பெண்ணிடம்.
“ஹ்ம்ம், நான் நல்லா இருக்கேன். நீங்க?...” என அவளுமே அவரிடம் நலம் விசாரிக்க,
“என்னடாம்மா, அத்தைன்னு சொல்லி பேச வேண்டாமா? எப்ப பாரு சும்மா மொட்டையா வாங்க போங்கன்னுட்டு...” என்றார் சம்பந்தம் தன் மகளிடம்.
“இருக்கட்டும் ண்ணே...” பாக்யஸ்ரீ கூற,
“அட நீ சும்மா இரு பாக்யா, எல்லாம் இவரால, ஒரு விசேஷத்துக்கும் மகளை கூட்டி வந்து பழக்காம, அவ யாரை பார்த்தாலும் இப்படியே பேசறா. அவளும் பார்க்கறவங்களோட பேசாம இல்லை. ஆனா முறைன்னு ஒன்னு சொல்லி பேசனும்ல. இப்ப பேசு, சொந்தம் சொல்லி கூப்பிடுன்னா? இதை முன்னாடியே செஞ்சிருக்கனும்...” என கூறிக்கொண்டிருக்க,
“ம்மா போலாம்....” என்றபடி வந்து நின்றான் அகனுறைமொழியோன்.
வந்தவன் பார்வை அவளை கண்டதும் ஒருநொடி தவித்தடங்கி பின் இயல்பிற்கு திரும்பியது.
நிவேதிதா. சற்றுமுன்னர் தான் மேடையில் அவள் நிற்கும்பொழுது பார்த்திருந்தான்.
எவ்வளவு சந்தோஷமாக அவள் வாழ்கிறாள் என்று காணுகையிலேயே கண்டுகொள்ள முடிந்தது.
முன்பை போல் தன்னுடைய இழப்பின் வலியெல்லாம் இப்போது தோன்றுவதில்லை.
பார்த்ததும் அவளின் சந்தோஷம் அவனையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் பக்குவத்தினை என்றோ வளர்த்திருந்தான்.
இதோ இப்போதும் பார்த்து மகிழ்ந்தானே தவிர்த்து பேச நினைக்கவில்லை. ஆனால் பேசும்படி அருகில் வந்து நின்றுவிட்டதில் தன்னை நிதானப்படுத்தினான்.
நிவேதிதாவின் திருமணத்திற்கும் கூட தவிர்க்காமல் சென்றிருந்தான் அகனுறைமொழியோன்.
வலிக்க வலிக்க ஒரு அறுவை சிகிச்சை என்பதை போல் அவளை வாழ்த்திவிட்டு தான் வந்திருந்தான்.
ஒருவருடமா? இரண்டுவருடமா? எட்டு வருடங்களாய் மனதில் சுமந்த காதல்.
இப்போது நினைப்பதும் அபத்தம். இதோ தான் வந்து நின்றதும் பாக்யஸ்ரீ தான் தவிதவித்து போனார் மகனை கண்டு.
“அடடே மருமகனே, எப்படி இருக்கீங்க?...” என்று ஞானசம்பந்தம் கை குலுக்க,
“ஹ்ம்ம், நான் நல்லா இருக்கேன் மாமா...” என்று அனைவரையும் பொதுவாய் விசாரித்தவன், நிவேதிதாவின் அருகில் நின்ற அவளின் ஐந்துவயது மகனை கண்டு புன்னகைத்தான்.
“உன் வீட்டுக்காரர் வந்திருக்காரா நிவி?...” பாக்யஸ்ரீ கேட்க,
“அவருக்கு இங்கலாம் வர எங்க நேரம்? சப்-கலெக்டர். வேலை வேலை தான். பொண்ணு வீடு மருமகனுக்கு உறவாம். அதனால நிவியை மட்டும் எங்களோட அனுப்பி வச்சார். இல்லைன்னா அவ எங்கம்மா வர போறா?...” என்றார் சம்பந்தம்.
இப்போதும் அவளிடம் அமைதி மட்டுமே. புன்னகையுடன் பார்த்து நின்றாள் நிவேதிதா.