தேன்மொட்டு கோலங்கள் – 2 (2)

அவனின் கேள்விக்கு பின் பொய்யுரைக்க முடியாது, சமாளிக்கவும் முடியாதென்று தம்பியே ஒப்புக்கொடுத்தான்.

“கலையரசன் வீட்டுல நக திருட்டு போச்சிண்ணே. களவாணிப்பயலுக களவாண்ட்டாய்ங்கே. கொள்ளநாளுக்கு பொறவு இப்பத்தேன் ஆள் அம்புட்டான். அதேம் போலீஸ்கிட்ட புடிச்சு குடுத்தேம்….” என்று எல்லாம் சொல்ல,

“சூதானமா இருந்துக்க ஜகா. அவேன் கோக்குமாக்கானவேன். பாத்துக்கிடு…” என எச்சரித்த பாண்டியன்,

“போய் ஒறங்கு. வெள்ளன கெளம்புவேன். நீயும் வந்துரு. சோலி கெடக்கு…” என்றான்.

ஜகா உடனே சம்மதித்து சரி என்று சொல்லி தாயையும், பாட்டியையும் பார்த்து நிற்க,

“என்னலே ஒன்னிய உசுப்ப ஆள் பாக்குதியா? நா வேணா வெள்ளன உசுப்பவா?…” என்ற கேள்வியில்,

“இல்லைங்கண்ணே…” என்று சென்றுவிட்டான் ஜகா.

தம்பி அங்கிருந்து நகர்ந்ததுமே அவன் சென்ற திசையிலிருந்து பார்வையை திருப்பிய பாண்டியன்,

“செத்த அவேன் என்ன செய்யுதியான், போறது, வாரதுன்னு வெசாரிக்க தான? மொத ஜகா படிச்சி முடிக்கட்டும். பொறவு எனக்கு குடும்பத்துக்கு வழி செய்யலாம். வெளங்குச்சா?…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

காந்திமதி மருமகளை பார்க்க அதற்காக காத்திருந்தவர் போல இதோ என்று ஆரம்பித்துவிட்டார் வடிவுமே.

“கால கெரகத்துல அந்த புள்ளைய காமிச்சி இப்ப வரைக்கி எம்மவன் வேற ஒருத்திய கண்கொண்டு பாக்காமா இருக்கியானே? எம்மவனுக்கு ஒரு நல்லது பண்ணாங்காட்டி எங்கட்ட வேவுமாத்த?…” என அனத்த ஆரம்பித்துவிட்டார் வடிவு.

இத்தனை பேச்சுக்களும் பாண்டியன் அறைக்குள் செல்லும் வரை கேட்டிருக்க உள்ளே நுழைந்து கதவை சாற்றியவன் சட்டையை கழற்றிவிட்டு படுத்துவிட்டான்.

ஒற்றை கையை பின்னந்தலையில் முட்டுக்கொடுத்தவன் இன்னொரு கையால் நெற்றியை நீவியபடியே இருந்தான்.

இப்போதைக்கு திருமணத்தில் நாட்டமில்லை. வேண்டவும் வேண்டாம் என்ற முடிவில் உறுதியாய் இருந்தாலும் மனதினோரம் முணுக்கென்று முள்ளாய் தைத்துக்கொண்டிருந்தது ஒரு உணர்வு.

வெகுநேரமெல்லாம் யோசிக்காமல் உள்ளே வந்து படுத்த ஐந்து நிமிடத்தில் உழைப்பின் களைப்பில் உறங்கியுமிருந்தான்.

————————————————

சல்வாருக்கான துப்பட்டாவை தவிர்த்துவிட்டு அதற்கு கான்ட்ராஸ்ட் துப்பட்டா இரண்டை எடுத்து மேலே போட்டு பார்த்தவள் ஒற்றை தேர்வு செய்துவிட்டு தலையை பனானா க்ளிப்பில் அடக்கிக்கொண்டாள்.

கீழே வரும் பொழுதே மகேஷ்வரி சாப்பிட்டபடி இருக்க அவருக்கருகே அமர்ந்துகொண்டாள் மதுரா.

“குட்மார்னிங் டா. ஆபீஸ் கிளம்பியாச்சா?…” என்ற தாயிடம்,

“ஆபீஸ் போகறதுக்கு முன்னாடி அகில் வர சொல்லியிருக்காங்க. பார்த்துட்டு போகனும் ம்மா…” என்றபடி பூரியை எடுத்து கிழங்கை கொஞ்சமும், காரமான தக்காளி சட்னியையும் எடுத்து வைத்துக்கொண்டாள்.

சிறு சிறு விள்ளல்கலாய் பிய்த்து பேசிக்கொண்டே ரசித்து மெதுவாய் உண்டு முடித்தவள் வேலையாள் தந்த பாலை வாங்கி குடித்துவிட்டு,

“பை ம்மா. நான் போய்ட்டு கால் பன்றேன்…” என்றாள்.

“பறக்காம மெதுவா போகனும் மது. இல்லைன்னா ட்ரைவரை வர சொல்லவா?…” என கேட்ட தாயின் கன்னத்தில் முத்தமிட்டவள்,

“ஸ்வீட் மம்மி. அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீங்க லன்ச்க்கு எனக்கு பிடிச்ச இறால் பிரியாணி செஞ்சு அனுப்பி வைங்க…”

“அகிலுக்கும் சேர்த்தா மது?…” என்று சிரிக்க,

“மேபி. அகில் நம்ம பைனான்ஸ் ஆபீஸ்க்கு தான் முதல்ல வருவாங்கன்னு நினைக்கறேன். வந்தா லன்ச் என்னோட தான் இருக்கும். அங்க போய்ட்டு கால் பண்ணுறேன் ம்மா…” என சொல்லி கிளம்பிவிட்டாள் மகள்.

அவளின் முகத்தில் அத்தனை சந்தோஷம். பார்த்த மகேஷ்வரிக்கு தன் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.

தன்னுடைய தந்தை தொழிலான ட்ராவல்ஸ் ஏஜென்ஸியை பெரிதாய் விரிவு படுத்தி எழில்மணி பார்த்துக்கொண்டாலும் அகிலனின் தந்தையான நாராயணனுடன் சேர்ந்து பைனான்ஸ் கம்பெனி ஒன்றையும் தொடங்கி இன்றுவரை மதிப்புடன் நடத்திக்கொண்டிருக்கிறார்.

முதலில் அத்தனை யோசனை ‘எதற்கு இன்னொரு தொழில், அதுவும் தெரியாத தொழில்’ என்று.

ஆனாலும் நாராயணனின் வற்புறுத்தலும், தனக்கே தனக்கான ஒரு தனி தொழிலும் என ஆசையில் கால் பதித்து இப்போது சிறப்பாக அதனை நடத்தி வருகிறார்.

மகேஷ்வரிக்கு அந்தவகையில் பெரும் திருப்தி. தொழிலையும் மதுராவும், அகிலும் சேர்ந்தே பார்த்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தார்.

வீட்டோடு மாப்பிள்ளையாக வருவது ஒன்றே இங்கே சிக்கலாக இருக்க அதையும் நண்பனின் மகன் என்றால் நிச்சயம் எழில்மணி புரிந்துகொண்டு விட்டுக்கொடுக்கலாம் என நினைத்தார்.

நினைக்க மட்டுமே அவரால் முடிந்தது. செயல்பட ஆயிரம் விஷயங்கள் காத்திருக்க அவரின் நினைவுகள் வெறும் நினைவுகளாக மட்டுமே.

தனது காரை அந்த காபி ஷாப்பில் பார்க் செய்த மதுரா கண்ணாடியில் தன்னையும் குனிந்து பார்த்துக்கொண்டாள்.

எளிமையான அழகு தான். ஆனாலும் சட்டென சுண்டியிழுக்கும் அழகும் கூட மதுராவிற்கு.

காரை விட்டு இறங்கி நடந்தவள் உள்ளே நுழைய அகிலன் அவள் வருவதை மெல்லிய புன்னகையுடன் பார்த்துக்கொண்டே இருந்தான்.

அவள் நெருங்க நெருங்க உள்ளூர சுருக்கென்ற வலி உள்ளம் முழுவதும் வியாப்பிக்க தன்னை நிதானப்படுத்த முயற்சித்தான்.

அதுவுமே பிரம்மபிரயத்தனம் தான் அவனுக்கு மதுரா தன்னெதிரே வந்து அமரும் வரை.

“குட்மார்னிங் அகில்…” என எதிரில் அமர்ந்து சொல்ல,

“குட்மார்னிங் மது…”  என்றான் பதிலாய்.

“ஹ்ம்ம், சொல்லுங்க. ஜர்னி எல்லாம் ஓகேவா?…”  

“ஹ்ம்ம், ஓகே…”

“ஆன்ட்டி அங்கிள் எப்படி இருக்காங்க? இன்னைக்கு அங்கிள் ஆபீஸ் வருவாங்களா இல்லை ரெஸ்ட் தானா?…” என்றாள் நேரடியாக விஷயத்திற்கு வராமல்.

“எல்லாருமே குட்…” என்றான் அகிலன்.

புதிதாய் அவன் முகத்தில் ஒருவித அவஸ்தையுடன் கூடிய ஏமாற்றமும், வலியும் மின்னி மறைந்தது.

“காபி சொல்லலாமே?…” என்றவள் இருவருக்கும் சொல்லிவிட்டு அவன் என்ன சொல்ல போகிறான் என சில நொடிகள் ஆராய்ச்சியாய் அவன் முகம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“மது…” என்று தயக்கமாய் அழைத்தவன் குரலில்,

“ஆன்ட்டி ஒத்துக்கலையா அகில்?…” என்றாள் நேரடியாக பளிச்சென்று.

அவள் புரிந்துகொள்வாள் என்று அவனுக்குமே நூறு சதவிகிதம் திண்ணம் தானே?

இத்தகைய பண்புகள் தான் அவளிடம் அவனை ஈர்த்ததும், விருப்பத்தை சொல்ல வைத்ததும்.

இன்று தானே விலகவிருப்பதாய் சொல்ல இருக்க மதுராவின் மனநிலையை யோசிக்க கூட முடியவில்லை.

எத்தனை புரிந்து கொண்டாலும், நிதானமாக இருந்தாலும் காதல் கைகூடாதென்றால் எந்த பெண்ணுக்குமே வலியுடன் கூடிய விஷயம் தானே?

சலனமின்றி பழகிய பெண்ணிடம் விருப்பத்தை கூறி அவளின் மனதை கலைத்து இப்போது இச்சூழ்நிலையில் நிறுத்தியதை எண்ணி தன்னையே வெறுத்தபடி அமர்ந்திருந்தான் அகிலன்.

“ரிங் புதுசா இருக்கே அகிலன்?…” என அடுத்த கேள்வி சுரீரென வந்து விழ கண்ணை மூடி திறந்தவன் மௌனமே ஆமோதிப்பாய் இருக்க மதுராவிடமும் சில நொடிகள் புயலை அடக்கிய பேரமைதி.  

“தென், உங்க கல்யாணத்துக்கு இன்வைட் செய்வீங்களா?…” என்றாள் அடுத்ததாக மதுரா.

அவளின் இந்த கேள்வியில் மதுராவின் விழிகள் காட்டிய ஜாலங்கள் அகிலனை கொன்று சென்றது.

“காபி வந்திருச்சு. குடிங்க…” என தனக்கானதை எடுத்துக்கொண்து பருக, தன்னை இன்னுமே நிதானப்படுத்திக்கொள்ள எடுத்துக்கொண்ட நிமிடங்கள் அது.

“முதல்லையே சொல்லியிருந்தா ஸ்வீட் சேர்த்தே ஆடர் பண்ணியிருக்கலாமே?…” என கேட்டு,

“டோனட் சொல்லவா? உங்க பேவரெட்…” என்றுவேறு இலகுவாய் கேட்க,

“மது ப்ளீஸ்…” என்றான் காபியை கூட எடுக்காமல், உள்ளுக்குள் நடுங்கும் மனதை அடக்கியபடி.

“காபி குடிச்சிட்டு பேசலாம் அகிலன்…” என்றவள் மெதுவாய் பருக அகிலன் அதனை தொட்டும் பார்க்கவில்லை.

“ஃபூட் வேஸ்ட் மட்டுமில்லை, காபியும் வேஸ்ட் பண்ண கூடாது. குடிங்க. ஆமா எப்போ வெடிங்? டேட் பிக்ஸ் பண்ணியாச்சா?…” என அடுத்தடுத்ததாய் கேள்விகளில் அவனை சுழற்றினாள்.

“நான் எவ்வளவோ ட்ரை பண்ணினேன் மது. பட் இதை என்னால அவாய்ட் பண்ண முடியலை…” என்றான் தன் மோதிரத்தை காண்பித்து.

“ஓஹ், ஓகே…” என்றாள் பதிலுக்கு.

“மது நார்மலா பேசு. என் மேல கோவம்ன்னா என்னை திட்டிரு. ஆனா எனக்கே என் மேல பயங்கர கோவம். எதுவும் செய்ய முடியலை. ஊருக்கு விசேஷம்ன்னு போய்ட்டு இப்படி ஒன்னு. அம்மாக்கிட்ட எவ்வளவு சொன்னேன். கேட்கவே இல்லை அவங்க…” என்றவன்,

“உன்னையும் கஷ்டப்படுத்தி இப்ப என்னை நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்கு. உன் மனசுல ஆசையை வளர்த்துட்டு…” என்னும் பொழுதே,

“ஸ்டாப் ஸ்டாப் அகிலன். இப்ப என்னாகிருச்சு?…” என்றாள்.

“என்னாகிருச்சா? நம்மளால மேரேஜ் பண்ணிக்க முடியாது மது. எனக்கு வேற பொண்ணோட மூணு நாள் முன்னாடியே என்கேஜ்மென்ட் முடிஞ்சிருச்சு. இப்ப வரை உள்ளுக்குள்ள நொறுங்கிட்டிருக்கேன். நெக்ஸ்ட் மந்த மேரேஜ்ன்னு எல்லாம் பிக்ஸ் பண்ணிட்டாங்க…” என்றான் பரபரப்பாய்.

எத்தனை ஆசையாய் வளர்த்த காதல், மதுராவின் படிப்பு முடியும் வரை பார்வையிலும் கண்ணியம் காத்து, காத்திருந்து அவளிடம் விருப்பம் சொல்லி அவளை வற்புறுத்தாமல் அவளாகவே சம்மதித்து எல்லாம் அழகான ஓவியங்கள்.

அத்தனையும் கலைந்து சென்ற ஓவியங்களாய் மாறியிருக்க நெஞ்சு பொறுக்கவில்லை அகிலனுக்கு.

எல்லாவற்றிற்கும் மகுடமாய் அவள் ‘இதனால் தனக்கு பாதிப்பில்லை’ என்றவிதத்தில் இருக்க தாளமுடியவில்லை.

ஒருவிதத்தில் இதற்கு அவன் மகிழ்ந்திருக்கத்தான் வேண்டும். ஆனால் காதல் கொண்ட உள்ளம் ‘இவ்வளவு தானா’ என்று குமுறியது.

“நெக்ஸ்ட் மந்த் கல்யாணம். கங்க்ராட்ஸ்…” என்றாள் மதுரா.

உள்ளத்தின் கொதிப்புகள் எல்லாம் மூடியிட்டு அமிழ்த்தியவள் அவனிடம் வெகுசாதாரணமாக பேச,

“உனக்கு கஷ்டமா இல்லையா மது?…” என்றான் வெளிப்படையாகவே.

“எதுக்கு கஷ்டம்? என்னை பிடிச்சிருக்குன்னு நீங்களா வந்து சொன்னீங்க. இப்ப இன்னொரு பொண்ணோட மேரேஜ்ன்னு சொல்றீங்க…” என்றவள் அவன் விரலில் புதிதாய் மின்னிய மோதிரத்தை பார்த்தாள்.

“ஓகே, காபி தீர்ந்திடுச்சு…” என்றதும் அடிபட்ட பார்வையுடன் அகிலன் பார்க்க, 

“இதை சொல்ல தான் கூப்பிட்டீங்களா? இதை நீங்க போன்லயே நேத்தே சொல்லியிருக்கலாம்….” என்று சொல்லி எழுந்துகொண்டாள்.

“ஹேவ் எ நைஸ் டே அகிலன். உங்களோட பியான்ஸிக்கு என்னோட விஷஸ் கன்வே பண்ணிடுங்க. பை…” என்று கிளம்பிவிட்டாள் மதுரயாழினி.

வெளியே வந்தவள் பார்க்கிங்கில் நின்ற தனது காரை கிளப்பும் பொழுது விரல்கள் லேசாய் நடுங்கியது.

“ட்ரைவரை வர சொல்லியிருக்கலாமோ?…” என தன் நெற்றிபொட்டை தேய்த்து விட்டுக்கொண்டாள்.

“ப்ச், சியரப் மது. யூ கேன்…” என்று ஆழ்ந்த மூச்செடுப்பில் காரை திருப்பிக்கொண்டு அந்த வளாகத்திலிருந்து வெளியே செல்ல அகிலனின் பார்வைகள் அவளை துளைப்பதை உணர முடிந்தது.

“எனஃப் மேன். கோ, கோ அவே…” அவளிதழ்கள் முணுமுணுக்க வீடு நோக்கி சென்றது மதுராவின் கார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *