தேன் மொட்டு – 2
அலங்காநல்லூரில் ஊரின் நடுமத்தியில் வீற்றிருந்தது அந்த மிகப்பெரிய வீடு.
இரவுவேளை ஒளிர்ந்த வீட்டின் வெளிச்சம் அந்த தெருவரைக்கும் நிறைந்திருக்க ஜீப்பை உள்ளே கொண்டு நிறுத்தினான் சொக்கநாதபாண்டியன்.
அவன் ஜீப்பை விட்டு இறங்கியதுமே வீட்டோடு பின்னால் கட்டப்பட்டிருந்த காளையின் குரலில் முகம் கனிய நேராக அங்கே சென்றான்.
“வாங்கய்யா…” என காளையை கவனிப்பவன் நகர,
“மருதுக்கு தீவனம் ஆச்சா மொக்கைய்யா?…” என்றபடி காளையை வாகாக வருடி கொடுத்தான் பாண்டியன்.
தலையை சலங்கை சத்தத்துடன் ஆட்டிக்கொண்டு தலைவனுக்கு ஏற்ற விதமாய் குழந்தையாய் குழைந்து வளைந்துகொடுத்தான் மருது.
“செத்தமின்னதேன் ஆச்சுங்கைய்யா…” மொக்கைய்யன் சொல்லவும் தலையசைத்துவிட்டு மருதுவின் திமிலில் இரண்டு தட்டு தட்டியவன் வீட்டை நோக்கி நகர்ந்தான்.
‘ம்மா’ என்ற மருதுவின் அழைப்பில் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் முகத்தில் புன்னகை நெளிய, கையசைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான் சொக்கநாதபாண்டியன்.
“அப்பத்தா பெரியண்ணே வந்துட்டாக…” என சொல்லிக்கொண்டே புத்தகத்தை மூடி வைத்தாள் கனகதுர்கா.
சொக்கநாதபாண்டியனின் உடன்பிறந்த தங்கை. கலை அறிவியல் கல்லூரியில் கணிதம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி.
“போ போயி களிய கொண்டாந்து வெக்க சொல்லுத்தா…” என சொல்லிக்கொண்டே முந்தானையை உதறி இடுப்பில் சொருகியபடி எழுந்தார் பாட்டி காந்திமதி.
“நீயி ரெடியாயிட்ட போல? நடத்து, நடத்து…” என சிரித்துக்கொண்டே துர்கா உள்ளே ஓட காந்திமதியிடம் வந்தார் பாண்டியனின் தாய் சண்முகவடிவு.
“என்னத்தே இன்னிக்காச்சு ஆவுமா? ஆவாதா?…” என கேட்க,
“அட கூறுகெட்டவளே, இத்தினிக்கு இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள அக்கப்போரா? கம்மின்னு கெடடி…” என மருமகளை அதட்டியவர்,
“எங்கத்தா அந்த போட்டோ?…” என்று கேட்டார்.
“அப்பத்தா மொத அண்ணே சாப்புடட்டும். பொறவு காமிப்பியாம்…” என துர்கா சொல்லிக்கொண்டே மேஜையில் கொண்டுவந்த பாத்திரத்தை வைக்க,
“படிக்கித புள்ளைய வேல வாங்குவியான்னுவான் ஒ அண்ணேன்? அவசியந்தேன் எனக்கு. போ, போ…” என்று மகளிடமிருந்து அந்த பொறுப்பை தான் வாங்கிக்கொண்டார் வடிவு.
“போயி ஒறங்குத்தா. கொள்ள நேரமாச்சு. சாமத்துல ஒறங்கி என்னன்னு காலம்பர நீ எந்திக்க?…” என காந்திமதி சொல்ல,
“ம்க்கும்…” என்று நொடித்துக்கொண்டே புத்தகத்தை எடுத்தவள் உள்ளே செல்லும் முன்னே பாண்டியன் வீட்டினுள் நுழைந்துவிட்டான்.
“வாய்யா…” என வடிவு அழைக்கவும்,
“இன்னுமா ஒறங்கல நீயி?…” என்ற குரல் தான் அவனிடமிருந்து முதலில் கண்டிப்புடன் வந்தது.
“போறேண்ணே…” துர்கா சொல்லவும்,
“இம்புட்டு நேரம் மாங்கு மாங்குன்னு ஒரே படிப்புத்தேன். நாந்தேன் போவ சொன்னேம்…” காந்திமதி தானே வந்து விளக்கம் கொடுக்க தலையசைப்புடன் உள்ளே சென்றான் அவன்.
“ஹ்ம்ம், பெத்த மவேன்கிட்ட பேசற மாரியா இருக்கு. நல்ல காரியத்த பேசக்குள்ள எம்புட்டு ஒதறுது?…” வடிவு அலுத்துக்கொள்ள,
“வளந்ததே ராசாவா வளந்தான். அதேம்த்தா. ஒனக்கேன் நோவுது? ஆள பொறந்தவேன் களுக்குன்னு பல்ல காமிச்சிட்டே வளைய வந்தா ஏச்சிப்பிடமாட்டானுவளா. இதெல்லா குடுப்பின…” என காந்திமதி பெருமையாய் சொல்லிக்கொண்டிருக்க,
“ம்க்கும், பாக்கத்தேன் போறேன் ஒம்ம குடுப்பினைய…” என பெருமூச்சுடன் வடிவு தன் மாமியாரை கிண்டலாய் சொல்ல அவருக்குமே கலக்கம் தான்.
“செவனேன்னு கெடந்த சங்க ஊதுனாங்காட்டி அந்த மவராசியை கைய காமிச்சி கெட்டிக்கிதியான்னு என்னிக்கு கேட்டேனோ இன்னிக்கு வரைக்கு யே ராசாவுக்கு ஒரு கலியாணத்த பண்ண வம்பாடு படுதேன்…” என மூக்கை சீந்தாத குறையாக புலம்ப ஆரம்பித்தார் காந்திமதி.
அவரின் புலம்பலுக்கு ஏதுவாய் மருமகளும் புலம்ப பாண்டியனின் அறை கதவு திறக்கும் ஓசையில் இருவருமே வாயை மூடிக்கொண்டனர்.
குளித்துவிட்டு உடை மாற்றி வந்தவன் அமர்ந்ததுமே சூடாக அரிசி சோறு சேர்த்த கேப்பை களியும், நெத்திலி கருவாட்டு குழம்பும் பரிமாறப்பட சாப்பிட ஆரம்பித்தான்.
மாமியாரும், மருமகளும் பேசுவதை பற்றி கண்ணால் ஜாடை காண்பித்தபடி இருந்தனர்.
காந்திமதி ஆரம்பிக்க போகவும், வடிவு உண்டு முடிக்கட்டும் என தடுக்கவும் என்று மாற்றி மாற்றி செய்துகொண்டிருக்க,
“வெஞ்சினம் இல்லயாக்கும் அப்பத்தா?…” என்றான் பாண்டியன்.
“யாத்தே, இவ வெக்கலையா?…” என பதறிய காந்திமதி,
“போய் எடுத்தாத்தா…” என்றார் மருமகளிடம்.
“இப்ப கொண்டாருவாய்யா. பைய பைய…” என்றார் அவனை மெதுவாய் சாப்பிடுமாறு சொல்லி.
“வேணாம்த்தா…” என்றான் தட்டில் மீதமிருந்ததை வேகமாய் உண்டபடி.
அத்தனை நிறுத்தி நிதானமாக உண்ணும் பழக்கம் என்றும் இருந்ததில்லை அவனுக்கு. பசிக்கு உணவு. அதுவும் ருசியாக எனும் பொழுது கூடுதலாய் உள்ளே செல்லும்.
“எப்பவும் வாளக்கருவாடு வறுக்கறதுதேன். எடுத்தார மறந்துட்டா போல?…” என சமாதானமாய் சொல்ல அதை எல்லாம் பெரிதாய் அவன் எடுத்துக்கொள்ளவில்லை.
வடிவு எடுத்துக்கொண்டு ஓடிவர இறுதியாய் இரு கவளம் மட்டுமே களி உருண்டை இருந்தது.
அதில் கொஞ்சமாக வறுத்த வாளைக்கருவாட்டு தொக்கை வைத்துவிட்டு நகர்ந்து நின்றார் வடிவு.
“சின்னவன் எங்கம்மோவ்?…” என உடைந்த கண்ணாடியின் கூர்மையுடன் வந்து விழுந்தது அந்த கேள்வி தாயை நோக்கி.
“ஜகாவா? ஜகா…” என வடிவு திணற,
“வெளில போனியான். வார நேர்ந்தேன்…” காந்திமதி அதையும் சமாளித்து,
“மெட்ராசுல கலியாணமெல்லாம் நல்லா சொவமா முடிஞ்சதாய்யா?…” என பேச்சை மாற்ற அவர் கேட்டதும் பாண்டியனின் கை ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்ததை போல நின்று பின் வாய்க்கும் தட்டிற்கும் பாலமமைத்தது.
“இன்னிக்கு ரவைக்கித்தேன் நீ அங்கருந்து கெளம்புவன்னு நெனச்சோம். நீ வாரேன்னு போன் போடவுந்தேன் களிய கிண்டி வெச்சேன்…” என்றார் காந்திமதி.
“ஹ்ம்ம்ம், முடிஞ்சது…” என்று மட்டும் சொல்லியவன் மனதிற்குள் கையில் காயத்துடன் எழுந்து நின்ற மதுராவின் முகம்.
அடர்ந்த புருவங்கள் நெரிய அந்த எண்ணத்தை விரட்டியவன் காரமான பச்சை மிளகாயை எடுத்து கடித்து மென்று விழுங்கினான்.
எப்போதும் மிளகாய் சாப்பிடுபவன் தான். ஆனால் கருவாட்டை விட்டுவிட்டு அதனை மட்டுமே இன்று அதிகமாய் உண்ண வடிவுக்கும், காந்திமதிக்கும் உள்ளுக்குள் பதட்டம்.
எங்கேயோ என்னவோ சரியில்லை போல என்று தோன்ற பாண்டியனின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
உண்டு முடித்தவன் சொம்பில் இருந்த தண்ணீரை ஒரே மடக்கில் குடித்துவிட்டு கை கழுவ எழுந்தான்.
“எய்யா சாமி, ஒங்கிட்ட செத்த பேசத்தா முழிச்சு கெடக்கேன்…” என்றார் காந்திமதி எங்கே பேரன் சென்றுவிடுவானோ என்று.
விடிந்தால் அவனை மறுநாள் இரவு வரை பிடிக்க முடியாது. இப்படி உணவுண்ணும் பொழுது பேசினாலும் வடிவு விடமாட்டார்.
மகன் வயிறார உண்ணும் பொழுது ஒருவரும் எதுவும் பேசிவிட கூடாது அவருக்கு.
“ஒழைக்கிறதே நிம்மதியா மூணுவேள சோத்துக்குத்தேன். அந்நேரங்காட்டியும் கட்டய போட்டா நல்லாவாருக்கும்?…” என்று மறுத்துவிடுவார்.
கணவரை இழந்து நின்றவரை இத்தனை வருடத்தில் கொஞ்சமும் சோர்ந்து போக விடாமல் தலைமகனாய் வீட்டையும், ஊரில் அவன் பொறுப்புகளையும் தாங்கி சிறப்பாய் நடத்தி வருபவன்.
எவ்வித குற்றம் குறையும் சொல்லிவிடமுடியாத அளவிற்கு ஊரில் பெரும், புகழும் மகனுக்கு கிடைப்பதில் எவ்வளவு பேருவகையோ, அந்தளவு அவன் எதிர்கால வாழ்க்கையும் நல்லவிதமாய் அமையவேண்டுமே என்ற பயமும் அவருக்குள் பெரிதாய்.
மகனின் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கான பயணத்தின் ஆரம்பமே ஆட்டம் கண்டிருந்தது.
முதன்முதலாய் ஒரு பெண்ணை காண்பித்து பேச நினைக்க முழுமனதாய் பிடித்திருக்கிறது என வாய்மொழியாய் சொல்லியும் விட்டதன் பின்னான நிராகரிப்பு.
துவண்டு தான் போனார் வடிவு. எத்தனை ஆசை பார்வை? மகன் தன் உணர்வுகளை மறையாமல் வெளிப்படுத்திய காலங்கள் அவை என நினைக்கும் அளவிற்கு இருந்ததே.
அவற்றை ஒட்டுமொத்தமாய் வார்த்தையில் நசுக்கிவிட்ட எழில்மணி மேல் இன்றளவும் தீராக்கோபம் தான் வடிவிற்கு.
பெண்ணை தர விருப்பமில்லை என்பது அவர்கள் உரிமை. என் மகனை பேச இவர்கள் யார் என்ற தார்மீக கோபமும், ஆதங்கமும் மிதமிஞ்சியே இருக்க அது எழில்மணியின் தாயிடம் கூட சில நேரம் முகம் கொடுத்து பேசாதளவிற்கு செய்துவிட்டது.
அதன் பின்னர் எத்தனை வரன்கள், எவ்வளவு அழகான பெண்கள், மதுராவை விடவும் படிப்பில் கூடுதலாக என அத்தனை மெனக்கெட்டு பார்த்துக்கொண்டிருக்க ஒற்றை பார்வையில் மறுத்துவிடுவான் சொக்கநாதபாண்டியன்.
பெருமூச்சுடன் நினைத்தபடி திரும்பி பார்க்க அங்கே வீட்டின் வெளித்திண்ணையில் இருந்த கல் திண்ணையில் வந்தமர்ந்து கால் நீட்டி தூணில் சாய்ந்திருந்தான் பாண்டியன்.
“ஏட்டி எத்தனவாட்டி கூப்புட?…” என கத்திக்கொண்டிருந்தார் காந்திமதி.
வெளியே தென்னைமர காற்றின் சிலுசிலுப்பும், வீட்டின் முன்பகுதியில் இருந்த பூந்தோட்டமும் என இடமே குளுமையாய் இருந்தது.
பகலெல்லாம் வாகனத்தை ஓட்டிவந்த அலுப்பு உடலை அசத்தினாலும் பேச வந்தமர்ந்திருந்தான் பாண்டியன்.
இந்த பேச்சு எதற்கு என அறியாதவனா? முகத்தில் எதையும் காண்பித்துக்கொள்ளவில்லை.
அத்தனை அழுத்தம். அதுவே முகத்தை இன்னும் இறுக்கமாய் காண்பிக்க கற்றை மீசை அவன் இதழ்களை மறைத்திருந்தது.
“நா ஒருத்தி கோட்டித்தனமா…” என தன்னையே நெற்றியில் தட்டிக்கொண்ட வடிவு அந்த புத்தகத்தை எடுத்து வந்தார்.
“அவென்கிட்ட குடுத்தா…” என தன்னிடம் நீட்ட வந்ததை பேரனிடம் தரும்படி காந்திமதி சொல்ல,
“பாருய்யா…” என்றார் வடிவு மகனிடம்.
“நாந்தேன் இப்பதைக்கு வேணாங்கறேன்ல?…” என பாண்டியன் அதனை வாங்காமலே சொல்ல,
“போட்டோவ பாக்காமலே என்னய்யா இது? பாரு சாமி. பாத்துட்டு ஒனக்கு வேணாமின்னா வேணாந்தேன்…” என காந்திமதி கெஞ்சவும் வாங்கிக்கொண்டான்.
‘என்னத்த பேசி வச்சிருச்சு இந்தம்மா?’ என வடிவு கண்டனத்துடன் மாமியாரை முறைத்து பார்க்கவும் தான் காந்திமதிக்கும் தான் பேசியது உரைக்க அவர் பேரனிடம் மேலும் பேசும் முன்,
“சரிவராதுத்தா. வேணா…” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டான் அவன்.
“இந்தா கட்டைய போட்டுட்டியான்ல…” என முணுமுணுத்துக்கொண்டே காந்திமதியும் எழுந்து நின்று பேரனை நிறுத்தும் முன் வெளியே கேட்டில் மோட்டார்பைக் சத்தம்.
“ஜகா வந்துட்டியான்…” என்றார் வடிவு.
உள்ளே செல்ல போன பாண்டியன் மீண்டும் வெளித்திண்ணைக்கு வந்து நின்றுவிட ஜகாவின் துள்ளல் நடை மட்டுப்பட்டு அடக்கமாக மாறியது.
“எங்க சுத்திட்டு வருத நீயி?…” பாண்டியன் கேட்கும் முன் காந்திமதி ஆரம்பிக்க,
“கெழவி நானு…” ஜகாவும் அதற்கு பதில் சொல்ல போக,
“இன்னிக்கு சோழவந்தான்ல என்னாலே ஒனக்கு சோலி?…” என அம்பாய் கேள்வி வந்தது தம்பி ஜகவீரபாண்டியனை நோக்கி சொக்கநாதபாண்டியனிடம் இருந்து.