Loading spinner
இசையும் மொழியும் தழுவ – 1 (2)

“இப்ப இது ரொம்ப முக்கியம். முதல்ல அவ கிளம்பட்டும். நீ போய் பல்லவிக்கு சாப்பிட ரெடி பண்ணு. பூரி முடிஞ்சதுல. சூடா போடு. சாப்பிட்டு வர்றாளோ என்னவோ...” என்றார் ஐயப்பன்.

“சரி நீங்களும் ரெடியா இருங்க. அவ வந்ததும் பேசிட்டு கிளம்புங்க...” என்ற எழிலுக்கு இது தன் இளையமகளின் திருமண விஷயமாக இருக்குமோ என்றொரு எண்ணம்.

அந்த வரன் வந்ததே பல்லவியின் மாமியார் வீட்டு பக்கத்தில் சொந்தம் என்று தான்.

“டேய் சஹி, நீ உன் பாக்ஸ் எல்லாம் எடுத்து வை. அங்க போய்ட்டு மிஸ் பண்ணிட்டேன்னு நிக்காத. இன்னொருதடவை செக் பண்ணு...” என நிவித்ரன் கூறவும் சரி என்ற தலையசைப்புடன் மீண்டும் மாடிக்கு சென்றாள் சஹானா.

மூத்தமகள் வருகையை ஐயப்பனுமே கணித்திருக்க மகனிடம் அது சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்க,

“ம்மா, ப்பா...” என்ற கூச்சலுடன் உள்ளே நுழைந்தாள் பல்லவி.

“வாம்மா...” என மகளை ஐயப்பன் வரவேற்க,

“லேட் பன்றேனாப்பா?...” என்றாள் பல்லவி தன் தகப்பனையும், தம்பியையும் பார்த்து.

“அதான் தெரியுதே? அப்பறம் என்ன? வந்த விஷயத்தை சொல்லாம லேட் பன்றேனான்னு?...” என நிவித்ரன் கேட்க,

“உன்னையா கேட்டேன்...” என பல்லவி பேச,

“ஆரம்பிக்காதீங்கடா. யப்பா கொஞ்சம் சும்மா இருங்களேன்...” என்றார் எழிலரசி.

“அதை இவன்கிட்ட சொல்லுங்க. வளர்ந்திருக்கான். அவ்வளோ தூரத்துலருந்து நான் வந்திருக்கேன். கொஞ்சமாச்சும் என்னன்னு யோசிக்கிறானா? எப்ப பாரு சண்டை...” என்று அவனை முறைக்க,

“நீ என்ன அஞ்சாறு மாசம் ஒருதடவையா வர்ற? உன்னை வந்ததும் என்னனு கேட்க?...” என அவனும் விடாது வம்பு வளர்க்க,

“வேண்டாம்டா. என்னை டென்ஷன் பண்ணாத...” என்றவள் இதனை பார்த்துக்கொண்டே சிரிப்புடன் இறங்கி வந்த சஹானா தன் அண்ணனின் பக்கம் வந்து நின்றாள்.

“உன்னையெல்லாம் சத்தியமா சப்போர்ட்க்கு கூப்பிடவே மாட்டேன் தாயி. நைஸா அவன்கிட்ட போய் நிக்கிற நீ...” என தங்கையின் காதை பிடித்து திருக,

“உனக்காக ,மருதாணி எல்லாம் பறிச்சு வச்சிருக்கேன். என்னையே கேலி பன்ற நீ?...” என்ற சஹானா,

“போகும்போது அக்காட்ட குடுத்துவிடுங்கம்மா...” என்றாள் தாயிடமும்.

“எப்படி பேச்சை மாத்தற நீ?...” என்ற பல்லவி,

“சரி சரி. வந்து எதுக்கு சண்டை? எல்லாம் நல்ல விஷயம் தான். எப்போ பொண்ணு பார்க்க வரலாம்ன்னு தேதி குறிக்க சொல்லி கேட்டிருக்காங்க. மார்னிங் சர்வா ஸ்கூலுக்கு கிளம்பும் போதுதான் போன் பண்ணிருக்காங்க. என் மாமியார் சொல்லவும் நேர்ல சொல்லுவோமேன்னு வந்துட்டேன்...” என சஹானாவை பார்த்துக்கொண்டே கூற, என்னவோ போலானது அவளுக்கு.

“சரிக்கா, நான் கிளம்பறேன். ட்ராபிக் ஆகிடும்....” என்றவள் கூச்சத்துடன் மற்றவர்களுக்கு தலையசைத்துவிட்டு வேகமாய் வெளியே ஓடிவிட்டாள்.

“வெக்கத்தை பாருங்க...” என்று சிரித்த பல்லவி,

“சரி வந்து உட்காருங்க பேசலாம்...” என்று அமர, ஐயப்பனும் நேரத்தை பார்க்க கண்ட நிவித்ரன்,

“ப்பா டைம் இருக்கு. போயிடலாம். சஹானாவுக்கு கொஞ்சம் தூரம். அதான் இப்பவே கிளம்பிட்டா. நமக்கு என்ன? பேசிட்டே போகலாம்...” என்றவன்,

“நீ சொல்லுக்கா...” என்றான் பல்லவியிடம்.

“உன்னை விசாரிக்க சொல்லிருந்தேனே. நல்லா விசாரிச்சிட்ட தான? என் மாமியார் பக்க சம்பந்தம்ன்னு எல்லாம் யோசிக்க வேண்டாம்டா நிவி...” பல்லவி கூற,

“இது சஹானா கல்யாண வாழ்க்கை. உன் மாமியாருக்கு நீ பயந்துக்கோ. நாங்க ஏன்?...” என்றவன்,

“வெளியிடங்கள்ல, பழகினவங்கன்னு விசாரிச்சா வரை குடும்பமும் சரி, மனுஷங்களும் சரி நல்லவிதம்ன்னு தான் பேசறாங்க. அதுல எந்த தப்பும் இல்லை. கொஞ்சம் ஹெட்வெய்ட்ன்னும் சிலர் சொல்றாங்க. அது பிரச்சனை இல்லை...” என்று கூற,

“ஹ்ம்ம், அவங்களுக்கு சஹானாவை ரொம்ப பிடிச்சிருக்காம். சீக்கிரம் பேசி முடிச்சா இன்னும் நாலஞ்சு மாசத்துல கல்யாணத்தை  முடிச்சிடலாம்ன்னு சொன்னாங்களாம்...”

“சரிம்மா, அதுக்குன்னு படபடன்னு நிக்க கூடாதுல. நல்லநாள் எல்லாம் பார்த்து பேசிட்டு நேரம் குறிப்போம். பொண்ணு பார்க்க வரட்டும். அதுக்கப்பறம் கல்யாணம் எப்போன்னு முடிவு செய்வோம்...” என்றார் ஐயப்பன்.

“அதான் நானும் நினைச்சேன். நகைகள் கொஞ்சம் இருக்கு தான். எவ்வளவு எதிர்பார்க்காங்கன்னு தெரியலை. அதையும் பார்க்கனும்...” என்றவர்,

“இப்போ தான் மூணுமாசம் முன்னாடி ஒரு இடம் முடிச்சோம்...” என கவலையானார் எழிலரசி.

“ம்மா, என்னவோ நம்மக்கிட்ட ஒண்ணுமே இல்லாதது மாதிரி. அதெல்லாம் சிறப்பா பண்ணிடலாம்...” என்றான் நிவித்ரன் தைரியமாய்.

“சரிடா, நீங்க கிளம்புங்க. நான் பல்லவிட்ட பேசிக்கறேன். ஈவ்னிங் அப்பா வரவும் நாங்க போய் நாள் பார்த்துட்டு வர்றோம்...” என்றார் எழிலரசி.

அவர்களும் கிளம்பி செல்ல பல்லவியும் சிறிதுநேரம் இருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பவும் வீடே வெறித்துவிட்டது.

-------------------------------------

அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு விரைவில் அலுவலகம் வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது சஹானாவிற்கு.

தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு பார்க்கிங்கை விட்டு வெளியே வர அப்போதுதான் அவனும் தன் காரை நிறுத்திவிட்டு வந்துகொண்டிருந்தான்.

அவன் வருவதற்குள் லிப்டினுள் நுழைந்து சென்றுவிடவேண்டும் என கால்களை எட்டி போட்டு வேகமாய் நடந்துமே அவன் அவளுடன் வந்துவிட லிப்ட் மேலே சென்றது இன்னும் கீழே வரவில்லை.

எத்தனை நேரம் திரும்பாமலிருக்க? அவனை பாராததை போலிருக்க? லிப்ட் கீழே வந்துவிட இருவருமே உள்ளே நுழைந்ததும், அவன் லேசாய் செரும, ஆழ்ந்த பெருமூச்சுடன் அவன் புறம் திரும்பினாள் சஹானா.

“குட் மார்னிங் ஸார்...” என்றதும்,

“ஹ்ம்ம், குட்மார்னிங்...” என்றவனின் குரலில் ஹ்ம்ம் மட்டுமே கேட்டு, குட்மார்னிங் எங்கோ மறைந்தே போனது.

‘இந்த ஹ்ம்ம் க்கு ஒரு குட்மார்னிங்கா?’ என நொந்துகொண்டாள் சஹானா.

தன்னை பார்த்தும் கூட அவன் சொல்லியிருக்க போவதில்லை என்பதில் அத்தனை திண்ணம்.

‘இதை யோசிக்காத சஹி, எப்படி பிரசன்டேஷன் பண்ண போற? ரிகர்ஸல் ரிகர்ஸல்’ என தனக்கு தானே சொல்லிக்கொண்டு நெற்றியை தட்டிக்கொள்ள எட்டாம் தளத்தில் லிப்ட் வந்து நிற்க சல்லென்று புயல் போல் அதிலிருந்து வெளியேறினான் அகனுறைமொழியோன்.

அவன் சென்றதும் தான் நிம்மதி பெருமூச்சே எழும்பியது சஹானாவுக்கு. நிதானமாய் உள்ளே வந்தவள் தன்னிருக்கைக்கு செல்ல,

“என்ன சஹி, உன் அத்தானோட ட்ரைவ்வா?...” என்று கண் சிமிட்டினாள் அலுவலக தோழியான ஷ்ரேயா.

“கொன்னுடுவேன் உன்னை. டென்ஷன் பண்ணாத...” என்றவள் கூற கேட்டு அத்தனை சிரிப்பு.

“ஓஹ், மேடம் கோபமாவா சொன்னீங்க? பயந்துட்டேன்...” என்று சொல்ல அவளின் தோளில் அடித்தவள்,

“நாளைக்கு டீம் மீட்க்கு பிரசெண்டேஷன் ரெடி. ஆனா இப்ப இதை காமிச்சு அப்ரூவல் வாங்கனுமே?...” என்றாள் சஹானா.

“உன் அத்தான் தான? அப்பறம் என்ன? நம்ம டார்லிங் ஓகே பண்ணிடுவார்...” என்றாள் ஷ்ரேயா கண் சிமிட்டி.

“எல்லாம் தெரிஞ்சும் பேசற பாரேன்...” என்று மீண்டும் தான் செய்தவற்றை எல்லாம் சரி பார்த்து, தோழியிடமும் ஒப்புதல் வாங்கிக்கொண்டாள்.

அந்த அலுவலகத்தில் அகனுறைமொழியோன் சஹானாவின் உறவினன் என்பது ஒருசிலருக்கு தெரிந்திருந்தது.

அதுவும் அகனுறைமொழியோனின் தங்கை திருமணத்தில் வைத்து உறவினர்கள் என்று சஹானாவும் குடும்பத்துடன் கலந்துகொண்டதை வைத்து.

“உன் ரிலேட்டிவா? அவர் இங்க ஜாயின் பன்றப்போ கூட நீ சொல்லலையே?...” என்றனர் அவளிடம்.

“தெரியாம வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வச்சிட்டேன். படுத்தறானுங்க...”என அவள் தான் நொந்துகொண்டாள்.

அங்கிருப்பவர்கள் அகனிடமுமே இதனை கேட்க, வெறும் தலையசைப்பு மட்டுமே.

“சொல்லவே இல்லையே...” என ஓரிருவர் உரிமை எடுப்பதை போல கேட்க,

“ஸோ?...” என அலட்டிக்கொள்ளாமல் புன்னகையுடன் எதிர் கேள்வி எழுப்ப அதன்பின் அவனிடம் இதனை ஒருவரும் கேட்பதில்லை.

அந்த அலுவலகத்தில் மற்றவர்களை போல தான் அவளும் என்பது அவனின் எண்ணம்.

அதனை காண்பித்திருக்கவுமே செய்தான். அனைவரிடமும் இன்முகத்துடன் தான் பேச்சுக்கள்.

அதுவும் அளவுகோலை கொண்டு அளவிட்டதை போல கனகச்சிதமாக முடித்துக்கொள்வதில் வல்லவன்.

புன்னகையுடன் பேசுகிறானே என்று அதிகப்படியாய் யாருமே பேசிவிட முடியாது.

அதையும்விட அகன் அந்த அலுவலகம் வந்ததிலிருந்து அவனுக்கு பெண் ரசிகைகள் ஏராளம்.

ரகசியமாய் ‘டார்லிங்’ எனும் செல்ல பெயருமே வைத்திருந்தனர். ஒருசிலரின் ஆர்வமான பார்வைகளுக்கும் எவ்வித எதிரொலியும் அவனிடத்தில் இருந்ததில்லை.

கவனித்திருந்தாலும் கண்டுகொள்ளாததை போல் கடந்துவிடுபவன் அவன்.

“எப்படித்தான் என்னோட இன்ட்ரெஸ்ட்டை கன்வே பன்றது அகன்கிட்ட?...” என சிலர் புலம்பவும் செய்ததுண்டு.

வந்த ஆறுமாதத்தில் அத்தனைபேரையும் வசப்படுத்தியிருந்தான். வேலை வாங்குவதிலும் கெட்டிக்காரன்.  

இதோ வந்து வேலையை துவங்கிய நிமிடம் சஹானாவிற்கு அழைப்பு வந்துவிட்டது எழிலரசியிடமிருந்து.

“சஹிம்மா, உன்னோட டேட் கரெக்ட்டா சொல்லு...” என எடுத்த எடுப்பில் கேட்க,

“ம்மா...” என பல்லை கடித்தாள் அவள்.

“இல்லடா பொண்ணு பார்க்க வர்றதுக்கு கேட்டிருக்காங்க. சப்போஸ் நாங்க பார்க்கிறது உனக்கு ஒத்துவரலைன்னா? அதான் அந்த தேதியை ஞாபகம் வச்சுப்பேன்ல...” என்று கேட்க,

“அதை இப்பவே கேட்கனுமா ம்மா? ஈவ்னிங் வந்திருவேனே?...”

“நீ வரும்போது நாங்க ஜோசியரை பார்க்க கிளம்பிருவோம். அதான் இப்பவே கேட்டுப்போம்ன்னு. அப்பறம்னா நானும் மறந்துட்டா...” என்று கேட்டு விஷயத்தை வாங்க, அவருடன் பேசிக்கொண்டே தான் செய்து வைத்திருந்ததை அகனின் மெயிலுக்கு அனுப்பிவைத்தாள் சஹானா.

“என்னவாம்?...” என ஷ்ரேயா கேட்க,

“அலையன்ஸ் வந்திருக்கு ரே. அதான் அம்மா கேட்டுட்டிருக்காங்க...” என்றதும்,

“வாவ்வ்வ், சொல்லவே இல்லை...” என அவள் குதூகலிக்க,

“சஹானா பாஸ் கூப்பிடறார்...” சக பணியாளன் வந்து கூற,

“காட், எக்ஸ்ப்ளைன் பண்ண கூப்பிடறார். பிள்ளையாரப்பா ப்ளஸ் மீ...” என்று அங்கே குட்டியாய் வைத்திருக்கும் விநாயகர் சிலையை தொட்டு வணங்கிவிட்டு எழுந்து சென்றாள்.

அத்தனை படபடப்பாய் சென்றவளுக்கு கையில் கைப்பேசியையும் எடுத்து சென்ற ஸ்ரமனையே எழவில்லை.

அவனின் அறைக்கதவினை தட்டிவிட்டு உள்ளே நுழைய சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவன் இமைகள் உயர்ந்து விழிகள் அனுமதியை தந்தது.

“ஸார்...” என்றதும் தலையசைத்தவன்,

“டூ இட்...” என்றான் அவள் அனுப்பியதை காண்பித்து.

கைப்பேசியை இருக்க பற்றியிருந்தவள் அழுத்தமான தொடுகையில் சைலன்ட்டில் இருந்து சத்தத்திற்கு மாறியிருந்தது.

“எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க சஹானா...” என்றான் மீண்டும் சத்தமாய்.

“எஸ், எஸ் ஸார்...” என்றவள் அவனின் கணினியின் பக்கம் வர பார்க்க,

“சிட்...” என்று அவளுக்கு இருக்கையை காண்பித்து கணினியை அவள் புறம் திருப்பினான்.

கைப்பேசியை வைத்துவிட்டு தான் தயார் செய்திருந்த அறிக்கையை அகனுக்கு தெளிவாய் நிதானமாய் விளக்க தலையசைப்புடன் கேட்டுக்கொண்டவன் மௌனத்தில் சஹானாவுக்கு ஓரளவு திருப்தி.

சரியில்லை என்றால் அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு மீண்டும் சரிபார்த்த பின் தான் அழைத்திருப்பான்.

“ஹ்ம்ம், நாட் பேட்...” என்று கூறியவன் அவளை கிளம்பும்படி சொல்லவும் கைப்பேசியை மறந்துவிட்டு அறையின் கதவருகே வர சட்டென்று அவளின் கைப்பேசி சப்தம்.

‘நெஞ்சுக்குள்ளே கேட்குதே, நம் காதல் ரிங் டோனா?’ என்னும் பெண்ணின் குரலில் அழைப்பு கேட்க, சஹானாவுக்கு பகீர் என்றானது.

அவளுக்கு பிடித்த பாடல். ஆனால் எப்போதும் கையில் வைத்திருப்பதால் வைபரேட்டில்  இருக்கும் கைப்பேசி அன்று அவள் அழுத்தியதில் கைபட்டு சப்தம் கூடியிருக்க அகனின் முன் ஒலித்துவிட்டது.

‘என்ன நினைப்பான் தன்னை?’ என்று என்னவோ போலாக அவனிடம் எவ்வித பாவனையும் இல்லை.

“ஸாரி ஸார்...” என்றதனை கூட கேட்டுக்கொள்ளாமல் தன் கணினியில் கவனம் வைத்தவன்,

“ஆபீஸ் டைம்ல மொபைலை சைலன்ட்ல வைங்க சஹானா...” என்று மட்டும் அவளை பாராமலே உரைக்க அவமானமாகி போனது அவளுக்கு.

Loading spinner
Loading spinner
error: Content is protected !!